

பொதுவாக கேப்டன் கூல் என்றும் எதையும் லேசாகவே எடுத்துக் கொள்வார் என்றும் ‘அவருக்குக் கோபமே வராது’ என்றும் கூறப்படுவதுண்டு, ஆனால் ஒருமுறை குல்தீப் யாதவ்விடம் ஒரு மேட்சின் போது அவர் கோபப்பட்டதைக் கண்டு இன்றும் குல்தீப் யாதவ் குலை நடுங்குகிறார்.
சமீபத்தில் மைக் ஹஸ்ஸி தோனி பற்றி கூறும்போது, “கடைசியாக பதற்றமடைபவர் வெற்றி பெறுவார், என்பதை தோனி நம்புகிறார்” என்றார்.
போட்டியில் பதற்றமான சூழ்நிலையில் தோனி பல சமயங்களில் கூலாக இருந்து பல போட்டிகளை வென்று கொடுத்தாலும் 2016 டி20 உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை பேட்ஸ்மென் தொட முடியவில்லை, ஆனால் அவர் ஒரு ரன் பை என்ற விதத்தில் ஓடலாம் என்று முயன்றார், இதை எதிர்பார்த்த தோனி வலது கை கிளவ்வை அகற்றி பந்தை ஸ்டம்பில் அடித்தார். வங்கதேச பேட்ஸ்மெனின் டை முயற்சி வீணானது இந்தியா வென்றது.
இப்படிப்பட்ட தோனி கோபமடைந்து பார்த்ததுண்டா என்ற கேள்விக்கு குல்தீப் யாதவ் பதிலளித்தார், “குசல் பெரேரா என் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். தோனி என்னிடம் சில ஆலோசனைகளை வழங்கினார், எனக்கு அவர் சொன்னது சரிவரப் புரியவில்லை. அடுத்த பந்தை குசல் பெரேரா ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். அப்போது தோனி என்னிடம் வந்து ‘நான் என்ன பைத்தியமா? நான் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளேன் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்’ என்றார்.
நான் உண்மையில் பயந்தே போய் விட்டென்.
ஆட்டம் முடிந்தவுடன் தோனியிடம் கோபமா என்று கேட்டேன் அதற்கு அவர், ‘நான் கடைசியாக கோபப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு அனுபவம் உள்ளது, அதனால் கூறுகிறேன் கேட்கவில்லை எனும்போது அவர்களை கடிந்து கொள்கிறேன் என் கோபத்தை இது வரை யாரும் பார்த்ததில்லை. ரஞ்சி ட்ராபி மேட்ச்களில் நான் கோபப்படுவேன்’ என்று தோனி என்னிடம் தெரிவித்தார்” என்றார் குல்தீப் யாதவ்.
இதே போல் தோனி தப்பும்தவறுமாக கேப்டன்சி செய்த போது டெஸ்ட் மேட்ச்களில் திராவிட், சச்சின் டெண்டுல்கர் போன்ற சீனியர்களுக்கு என்ன கோபம் வந்திருக்கும்? அதை அவர்கள் தான் கூற வேண்டும்.