Last Updated : 06 Aug, 2015 09:53 AM

 

Published : 06 Aug 2015 09:53 AM
Last Updated : 06 Aug 2015 09:53 AM

ஆஷஸ் 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்ல இங்கிலாந்து தீவிரம்

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இரு போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவோ தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்குமானால் தொடரை இழந்துவிடும்.

முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து, 2-வது டெஸ்ட்டில் படுதோல்வி கண்ட நிலையில், 3-வது போட்டியில் மீண்டும் வென்று வலுவான நிலையில் உள்ளது. 4-வது போட்டி, தொட ரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக இருப்பதால் இரு அணிகளுமே கடுமையாகப் போராடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

தடுமாறும் கிளார்க்

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் ரன் குவிப்பு அமையும். தொடர்ந்து தடுமாறி வரும் கேப்டன் கிளார்க் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் அவர், இந்தப் போட்டியிலாவது சிறப்பாக ஆடி அதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆடம் வோஜஸுக்குப் பதிலாக ஷான் மார்ஷ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மார்ஷ் இட ம்பெறும்பட்சத்தில் கிளார்க் 5-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. மற்றபடி ஆஸ்திரேலிய அணி யில் எந்த மாற்றமும் இருக் காது. பின்வரிசையில் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில், ஆஸ்திரேலி யாவுக்கு நம்பிக்கையளிக்கிறார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஹேஸில்வுட் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் நாதன் லயனை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

வலுவான பேட்டிங்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. இங்கிலாந்து அணி கேப்டன் அலாஸ்டர் குக், இயான் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவருமே பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் இடம்பெறாததால் ஸ்டூவர்ட் பிராட் தலைமையிலான கூட்டணி கவனிக்கவுள்ளது. 2-வது வேகப்பந்து வீச்சாளராக ஸ்டீவன் ஃபின் அசத்தி வருகிறார். ஆண்டர்சனுக்குப் பதிலாக மார்க் உட் இடம்பெறுவார் என தெரிகிறது. அவருக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக உடற்தகுதி சோதனை நடை பெறுகிறது. ஒருவேளை அதில் மார்க் உட் தேறாதபட்சத்தில் லியாம் பிளெங்கெட் இடம்பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் மொயீன் அலி நம்பிக்கை யளிக்கிறார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெல்லும்பட்சத்தில் சொந்த மண்ணில் தொடர்ந்து 4-வது முறையாக ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய பெருமையைப் பெறும்.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x