

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் போட்டிகளை நடத்துவது பற்றி அழைப்புகள் பிசிசிஐ பக்கம் வந்தவண்ணம் உள்ளன.
விராட் கோலி தலைமை ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சைமன் கேடிச் இந்தியாவுக்கு வெளியே நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலோ தென் ஆப்பிரிக்காவிலோ நடத்தலாம் என்று கூறுகிறார் சைமன் கேடிச்.
இலங்கையும் ஐபிஎல் கிரிக்கெட்டை இலங்கையில் நடத்த பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவை விடவும் லாக்-டவுனை மிகவும் தீவிரமாக இலங்கை கடைப்பிடித்து வருகிறது 4 வாரங்களாக அங்கு ஒன்றும் நடைபெறவில்லை.
ஆனால் கரோனாவை நாங்கள் விரட்டி விடுவோம் அப்போது ஐபிஎல் கிரிக்கெட்டை இங்கு நடத்தலாம் என்று இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டை ரத்து செய்வதன் மூலம் பிசிசிஐ-க்கு 500 மில்லியன் டாலர்கள் வரை நஷ்டமாகும் என்கிறார் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா.
“இலங்கையில் ஆடினால் இந்திய ரசிகர்களுக்கும் டிவியில் பார்க்க கால நேரம் தோதாக இருக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களின் இந்த அழைப்பை ஏற்பதற்காகக் காத்திருக்கிறோம்” என்றார் ஷம்மி சில்வா. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் ஒரு வருவாய் ஆதாரமாக இருக்கும் என்றார் அவர்.