

கரோனா வைரஸுக்கு எதிரான போரே உலகக்கோப்பைகள் அனைத்துக்கும் தாய் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா மரணம் 350-ஐக் கடந்து ள்ளது, பாதிப்பு எண்ணிக்கை 11,000-த்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து லாக்-டவுன் உத்தரவை மத்திய அரசு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக தன் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் விளையாட்டுத்துறையில் கற்ற பாடங்களை கோவிட்-19 க்கு எதிரான போரில் செயல்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
“இன்றைய தேதியில் கோவிட்-19 நம்மை இறுதி கட்ட போராட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது, இந்த கரோனாவுக்கு எதிரான போர் என்பது உலகக்கோப்பையை வெல்வதற்கான விழைவுக்குச் சமமானது. வெற்றி பெறுவதற்காக நம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுப்போம் அதேபோல்தான் கரோனாவை வெல்வதும். நம்மை உற்று நோக்குவதன் முகம் சாதாரண உலகக்கோப்பை அல்ல. அனைத்து உலகக்கோப்பைகளின் தாய்.
இதில் 11 பேர் மட்டும் போராடவில்லை. 1.4 பில்லியன் மக்கள் போராடி வருகிறார்கள். வாருங்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். 1.4 பில்லியன் மக்கள் என்ற இந்த ஆதிக்க மக்கள் சக்தி கரோனாவை வீழ்த்த ஒன்றிணைவோம். மானுடத்தின் உலகக்கோப்பையில் நம் கைகளை வைப்போம்.
நாம் இதில் வெற்றி பெறுவோம், ஆனால் அடிப்படைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம் பிரதமர் முன்னிலை வகித்து வழிநடத்துகிறார். மேலேயிருந்து வரும் உத்தரவுகளுக்கு அனைவரும் கீழ்படிய வேண்டும். அது பிரதமராக இருக்கலாம், மத்திய அரசாக இருக்கலாம், மாநில அரசாக இருக்கலாம் அல்லது தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களிடமிருந்து வரும் உத்தரவாக இருக்கலாம், கீழ்படிவது நம் கடமை.
வீட்டுக்குள் இருப்பது, சமூக விலகலை கடைப்பிடிப்பது என்ற இரண்டு உத்தரவு இதில் தனித்துவமானது. இது எளிதல்ல, வெற்றி பெறுவது எளிதல்ல, ஆனால் ஆட்டத்தில் வெற்றி பெற நாம் இந்த வலியின் ஊடாகத்தான் சங்கிலியை உடைக்க முடியும்” என்றார் ரவிசாஸ்திரி.