

எவ்வளவு பெரிய பிரபலஸ்தராக இருந்தாலும் சோஷியல் மீடியா என்று வந்து விட்டால் ட்ரம்ப் உட்பட பெரிய பெரிய ஆபீசரெல்லாம் அடி வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியதுதான். ஷோயப் அக்தர் சமீப காலமாக சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகிறார்.
இந்த வகையில் இவர் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் இஸ்லாமாபாத்தின் வெறிச்சோடிய சாலைகளில் தான் சைக்கிள் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு, “என் அழகான நகரில் சைக்கிளிங். அருமையான வானிலை, வெறிச்சோடிய சாலைகள், நல்ல பயிற்சி” என்று வாசகத்தையும் வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவாமலிருக்க அனைவரும் ஊரடங்கைக் கடைபிடித்து வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்து விட்டு தான் மட்டும் சைக்கிளில் ஊர் சுற்றுவதா என்று நெட்டிசன்கள் அவரை பின்னி எடுத்து வருகின்றனர்.
ஒரு வாசகர், “வெளியே வர தவறான நேரம், உங்களைப் பார்த்து பலரும் வருவார்கள், எனவே பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என்று லேசான அறிவுரையுடன் விட்டு விட்டார்.
இன்னொருவர் அக்தரை வெளுத்து வாங்கி, “என்ன ஒரு சுயநலமி, மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவருக்கு காலியான சாலை அழகாம்” என்று சாடியுள்ளார்.
இன்னொரு பேஸ்புக் பயனாளர், பிரபலமானவர்கள் ரோல்-மாடல்களாக இருக்க வேண்டும் அதைவிடுத்து இது போன்று நான் -சென்ஸ் செயலை செய்து விட்டு அதை சமூகவெளியில் வேறு பதிவிடுகிறீர்கள், வெட்கங்கெட்ட செயல் என்று அக்தரை சாடியுள்ளார்.
இவ்வாறு பலரும் அவரைச் சாடியுள்ளனர், ஏற்கெனவே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நிதி திரட்ட 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட வேண்டும் என்று கூறி வகையாக வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.