ஐபிஎல் கிரிக்கெட்டை காலவரையறையின்றி ஒத்தி வைக்க முடிவு: நடக்காவிட்டால் ரூ.3000 கோடி நஷ்டம்
பிரதமர் மோடியுடன் நேற்று நாட்டின் முதலமைச்சர்கள் மேற்கொண்ட வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் ஊரடங்கு மற்றும் லாக்-டவுன் நடவடிக்கைகளை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பரிந்துரை மேற்கொண்டதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
பிசிசிஐ சார்பில் இதுவரை அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பு வரவில்லை என்றாலும் தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் செய்திகளின் படி பிசிசிஐ நிர்வாகிகள் அணி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. எனினும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திங்களன்று நிர்வாகிகளிடம் இது தொடர்பாகப் பேசுவார் என்று தெரிகிறது.
மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் கரோனா காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது, ஆனால் கரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்ததன் காரணமாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு லாக் டவுன் நீட்டிக்கப்படவுள்ளதையடுத்து ஐபிஎல் நிலவரம் கவலைக்கிடமாகியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு ரத்து செய்தால் நஷ்டம் ரூ.3000 கோடி என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனால்தான் மாற்று வழிமுறைகளைப் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
முதலில் விசா கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும், பயண கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும். எனவே செப்டம்பர்-அக்டோபர் வாக்கில் நடத்த வாய்ப்புள்ளது என்று கூறும் பிசிசிஐ அதிகாரி, ஆனால் எது குறித்தும் இப்போதே கூறுவது சரியாகாது என்றார்.
ஆகவே ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
