ஹெராத் சுழலில் சுருண்டது இந்தியா: முதல் டெஸ்ட்டில் அதிர்ச்சி தோல்வி

ஹெராத் சுழலில் சுருண்டது இந்தியா: முதல் டெஸ்ட்டில் அதிர்ச்சி தோல்வி
Updated on
3 min read

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இலங்கை சுழற்பந்து வீச் சாளர் ரங்கனா ஹெராத் இந்தியாவின் 7 விக்கெட்டுகளை சாய்த்து தனது அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

4-வது நாளான நேற்று வெற்றிக்கு 153 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கையின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்களில் சுருண்டது. இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது. காலே மைதானத்தில் இதுவரை எந்த அணியுமே 4-வது இன்னிங்ஸில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை எட்டியதில்லை. அது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் காலே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன், விராட் கோலி ஆகியோர் சதமடிக்க, 117.4 ஓவர்களில் 375 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும், விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமல் 162 ரன்கள் குவிக்க, அந்த அணி 82.2 ஓவர்களில் 367 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவன் 13, இஷாந்த் சர்மா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஹெராத் அபாரம்

4-வது நாளான நேற்று முதல் 6 ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது இலங்கை.

ஷிகர் தவனும், இஷாந்த் சர்மாவும் தற்காப்பு ஆட்டத்தில் தீவிரம் காட்ட, இந்த 6 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

இதையடுத்து ரங்கனா ஹெராத்தை பந்துவீச அழைத்தார் இலங்கை கேப்டன் மேத்யூஸ். அதற்கு முதல் பந்திலேயே பலன் கிடைத்தது. 10 ரன்கள் எடுத்த இஷாந்த் சர்மா, எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

பின்னர் வந்த ரோஹித் சர்மா 4 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் போல்டாக, கேப்டன் கோலி 3 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடியும் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 83 பந்துகளைச் சந்தித்த தவன் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கவுஷல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விருத்திமான் சாஹா 2, ஹர்பஜன் சிங் 1, அஸ்வின் 3 என அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் போராடிய ரஹானே 76 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக மிஸ்ரா 15 ரன்களில் வெளியேற, 49.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. கடைசி 6 விக்கெட்டுகளை 52 ரன்களுக்கு இழந்தது.

இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 7 விக்கெட்டுகளையும், தரின்டு கவுஷல் 3 விக்கெட்டு களையும் வீழ்த்தினர். இலங்கை தடுமாறியபோது சதமடித்து தூக்கி நிறுத்திய சன்டிமல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டி வரும் 20-ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது.

தோல்விக்கு நாங்களே காரணம்: கோலி

இலங்கைக்கு எதிராக தோற்றது குறித்துப் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, “இந்தப் போட்டியில் தோற்றதற்காக யார் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தவில்லை. தோல்விக்கு நாங்களே காரணம். 2-வது இன்னிங்ஸில் இலங்கையின் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனால் அதன்பிறகு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்த அணியை சுருட்ட தவறிவிட்டோம். 3-வது நாளிலேயே இந்தப் போட்டியை முடித்திருக்க வேண்டும். ஒரு மோசமான செசனால் போட்டியின் முடிவே மாறிவிடலாம். டெஸ்ட் கிரிக்கெட் அப்படிப்பட்டதுதான்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கான அனைத்து பாராட்டுகளும் இலங்கை கேப்டன் மேத்யூஸ் மற்றும் அவருடைய சகாக்களையே சேரும். ஹெராத் சிறப்பாக பந்துவீசி எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு தெளிவான எண்ணமும், வலுவான மனநிலையும் முக்கியம். அது இருந்தால்தான் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள முடியும். அதை இப்போது கற்றுக்கொண்டுள்ளோம்” என்றார்.

இலங்கை 2-வது இன்னிங்ஸை ஆடியபோது சன்டிமல் இரு முறையும், திரிமானி ஒரு முறையும் நடுவரின் தவறான தீர்ப்பால் தப்பிப் பிழைத்தனர். ஒருவேளை டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட்டிருந்தால், அவர்கள் ஆட்டமிழந்திருப்பார்கள். போட்டியின் முடிவும் மாறியிருக்கும். அது குறித்துப் பேசிய கோலி, “டிஆர்எஸ் முறை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் தொடருக்குப் பிறகு சிந்திப்பது அவசியம்” என்றார்.

சுதந்திர தினம் கொண்டாடிய இந்திய வீரர்கள்

காலே டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் 69-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். கோலியும், இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரியும் தேசியக் கொடியை ஏற்றினர்.

சங்ககாராவுக்கு விடை கொடுத்த காலே மைதானம்

இலங்கை அணியின் மூத்த வீரரான குமார் சங்ககாரா, கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியை காலேவில் விளையாடிய குமார் சங்ககாராவுக்கு சகவீரர்களும், மைதானத்தில் திரண்டிருந்த இலங்கை ரசிகர்களும் பிரியா விடை கொடுத்தனர். இதே காலே மைதானத்தில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சங்ககாரா.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியில் ஓடி வந்த சங்ககாரா, வெற்றிக்கு காரணமான சன்டிமல், ஹெராத் ஆகியோரை கட்டித் தழுவினார். பின்னர் கேப்டன் மேத்யூஸ் ஓடி வந்து சங்ககாராவை கட்டித் தழுவினார்.

பின்னர் இலங்கை வீரர்கள், சங்ககாராவை தங்களின் தோளில் தூக்கி வைத்து மைதானத்தை வலம் வந்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவருக்கு மரியாதை செய்தனர்.

சங்ககாராவின் மனைவி, மகன், மகள் ஆகியோர் முக்கிய நபர்களுக்கான இருக்கையில் அமர்ந்து சங்ககாராவுக்கு அளிக்கப்பட்ட மரியாதையைப் பார்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in