

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் சாய்னா 21-15, 19-21, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் இகனை வீழ்த்தினார். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கடந்த 5 ஆண்டுகளாக காலி றுதியோடு வெளியேறிய சாய்னா, முதல் முறையாக பதக்க வாய்ப்பை உறுதி செய்திருக் கிறார். அரையிறுதியில் இந்தோ னேசியாவின் லின்டாவெனியை சந்திக்கிறார் சாய்னா.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சிந்து 17-21, 21-19, 16-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனிடம் தோல்வி கண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரு வெண்கலம் வென்றிருந்த சிந்து, இந்த முறை ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்தோடு வெளியேறியுள்ளார்.
மகளிர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ஜுவாலா-அஸ்வினி ஜோடி 23-25, 14-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நகோ புகுமான்-குருமி ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.