

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணி வீரர்களையும் கேப்டன் கோலியையும் ஸ்லெட்ஜ் செய்ய அஞ்சியதன் பின்னணியில் ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தங்கள் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் புதிய வெடிகுண்டை வீசியுள்ளார்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக சில வேளைகளில் ஆஷஸையும் மிஞ்சும் அளவுக்கு பிரமாதமான டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறை சமீபமாக மோதும் போதும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் பணமழை ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டு கோலியையும் இந்திய வீரர்களையும் ஸ்லெட்ஜ் செய்ய அஞ்சினர் என்று ஒரு சுயநலப்போக்கையும் பணத்தாசையையும் காரணமாகக் கூறி புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளார் மைக்கேல் கிளார்க்.
பிக்ஸ்போர்ட்ஸ் பிரேக்பாஸ்ட்-ல் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:
கிரிக்கெட் ஆட்டத்தின் நிதிநிலைமைகளைப் பொறுத்தவரை இந்தியா எப்படி பலம் பொருந்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி உள்நாட்டில் ஐபிஎல் தொடரிலும் சரி.
ஆஸ்திரேலிய அணி, சிலபல வேளைகளில் மற்ற அணிகளும் கூட கோலியையும் இந்திய வீரர்களையும் ஸ்லெட்ஜ் செய்ய பயந்து சுயநலன்களுக்காக இந்தியாவிடம் பணிந்து நடந்து கொண்டன. ஏப்ரலில் இந்தியாவில் வந்து ஆட வேண்டும், அதே வீரர்களுடன் ஆட வேண்டுமென்பதற்காக கோலியையும் பிறரையும் ஸ்லெட்ஜ் செய்ய பயப்பட்டனர்.
டாப் ஆஸ்திரேலிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகளும் போட்டாப்போட்டி மேற்கொண்டன.
வீரர்கள் என்ன நினைத்தார்கள் என்றால்: நான் கோலியை ஸ்லெட்ஜ் செய்யப்போவதில்லை. என்னை அவர் பெங்களூரு அணிக்கு எடுக்க வேண்டும். 6 வாரங்களுக்கு நான் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக வேண்டும், என்றே வீரர்கள் பலரும் நினைத்தனர்.
இந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில்தான் ஆஸ்திரேலிய அணி மென்மையாகப் போனது, அதன் வழக்கமான ஆக்ரோஷ பாணி காணாமல் போனது.
இவ்வாறு புதிய குண்டு ஒன்றைத் தூக்கி வீசியுள்ளார் மைக்கேல் கிளார்க்.
வர்ணனையில் விமர்சன நெடி அதிகமானால் கூட அவர்களின் ஒப்பந்தங்களும் பறிக்கப்படும் என்பதற்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் உதாரணமும் முன்பு ஹர்ஷா போக்ளே உதாரணமும் இருக்கும் போது மைக்கேல் கிளார்க் கூறுவதிலும் உண்மை இருக்கலாம் என்றே தெரிகிறது.