

சவாலான காலக்கட்டங்களில் விளையாட்டு வீரர்களும் சமூக சேவையில் ஈடுபடுவது அனைவருக்குமான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய செய்தியாகும். இந்நிலையில் ஜார்கண்ட் கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் வீருரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான ஷாபாஸ் நதீம் 250 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி சமூக சேவையில் இறங்கியுள்ளார்.
ஜாரியா, தன்பாத் பகுதிகளில் அரிசி, காய்கறிகள், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பைகளை விநியோகித்தார். “நாங்கள் இதுவரை 250 குடும்பங்களுக்கு உதவிப்பொருட்கள் அனுப்பியுள்ளோம். வரும் நாட்களில் மேலும் உதவிகளை வழங்கவிருக்கிறோம்” என்று தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்திற்கு தெரிவித்தார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாபாஸ் நதீம் கடந்த ஆண்டு ராஞ்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.
“குறைந்தபட்சம் நம்மால் இவ்வளவு செய்ய முடியும். குடிசைகளில் வாழும் இந்த மக்களுக்கு இது நிச்சயம் உதவும், நேரடியாக உதவுவதில்தான் எனக்கு நம்பிக்கை அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பேக்கிங்கில் பிஸியாக உள்ளனர். விரும்பினால் மக்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து பொருட்களை சேகரித்துச் செல்லலாம்” என்கிறார் ஷாபாஸ் நதீம்.