

இந்திய ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை விதித்துள்ளது ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கைக் குழு.
கடந்த மாதம் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரை இறுதி போட்டியின்போது குர்பஜ் சிங், இந்திய அணியில் கோஷ்டி பூசலை உருவாக்கியதாகவும், வீரர்களிடையே பிளவு ஏற்படுத்தியதாகவும் கூறி முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜூடே பெலிக்ஸ் அறிக்கை அளித்திருந்தார்.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. அதன்முடிவில் குர்பஜ் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் குர்பஜ் சிங் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஹர்பிந்தர் சிங் கூறுகையில், “குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 2016 மே 9-ம் தேதி வரை அவர் ஹாக்கிப் போட்டிகளில் விளையாட முடியாது” என்றார்.