

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 9 நாட்கள் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 275 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவுக்கு 47 தங்கம், 54 வெள்ளி, 72 வெண்கலம் என மொத்தம் 173 பதக்கங்கள் கிடைத்தன.
சிறப்பு ஒலிம்பிக்கில் கோல்ஃப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை 14 வயது ரன்வீர் சிங் சைனிக்கு கிடைத்தது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவரான சைனி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் டுவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சிறப்பு ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதித்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.
அவர்கள் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். கடுமையான உழைப்பு, விளையாட்டு உணர்வு உள்ளிட்டவற்றின் மூலம் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.