

ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் தனக்குப் பிடித்த பொழுதுபோக்காக சிறந்த வீரர்கள், சிறந்த லெவன், சிறந்த ஒருநாள், சிறந்த டெஸ்ட் லெவன் என்று எதையாவது அறிவித்துக் கொண்டேயிருப்பார், அதற்கான திறம்பட்ட காரணங்களையும் முன் வைப்பார்.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு தற்போது அனைத்து கால இந்திய சிறந்த அணியைத் தேர்வு செய்து அதற்கு கங்குலியைக் கேப்டனாக நியமித்துள்ளார் .
தோனி, கோலியை நிராகரித்ததற்குக் காரணம் தான் எதிர்த்து ஆடிய வீரர்கள் மத்தியில் இந்த அணியைத் தேர்வு செய்வதாக ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
“நான் என்னுடன் ஆடிய வீரர்களை மட்டுமே கவனத்தில் கொண்டேன், அதனால்தன தோனி, விராட் கோலி இந்த அணியில் இடம்பெறவில்லை. தோனி ஒரு கிரேட்டஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென், கோலி அனைத்து வடிவங்களிலும் இப்போது சிறந்த வீரர், ஆனால் நான் இவர்களை எதிர்த்து ஆடியதில்லை” என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் விட சர்ச்சைக்குரிய விலக்கல் விவிஎஸ் லஷ்மண், இவர் ஷேன் வார்னை உரித்து எடுத்துள்ளார். அதுவும் கொல்கத்தாவில் இவரை ஆடிய விதம் இயன் சாப்பல் போன்ற வல்லுநர்களையே இப்போது கூட பேச வைத்துள்ளது, ஆனால் ஷேன் வார்ன் என்ன கூறுகிறார் என்றால், “நான் கங்குலியைத் தேர்வு செய்துள்ளேன் இந்த அணிக்கு அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதனால் லஷ்மண் இல்லை.” என்றார்.
நயன் மோங்கியா விக்கெட் கீப்பர், அனில் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்க வீரர்களாக விரேந்திர சேவாக், சித்து. பிறகு ராகுல் திராவிட், டெண்டுல்கர், அசாருதீன்.
ஷேன் வார்னின் அனைத்து கால இந்திய லெவன்:
கங்குலி (கேப்டன்), சேவாக், சித்து, ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், மொகமட் அசாருதீன், கபில்தேவ், நயன் மோங்கியா, ஹர்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே.