

இந்திய ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்துள்ளது.
இவ்விரு அணிகள் இடை யிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி (4 நாள் போட்டி) கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் வான் ஸில்-ஹென்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 20 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தது. வான்ஸில் 28 ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்ரிக்ஸுடன் இணைந்தார் டி புரூன்.
இந்த ஜோடி 2-வது விக்கெட் டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. 87 பந்துகளைச் சந்தித்த ஹென்ரிக்ஸ் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ரமீலா களம்புகுந்தார். அவர் வந்தது முதலே சிறப்பாக ஆட, மறுமுனையில் டி புரூன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பவுமா களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரமீலா சதமடித்தார். 197 பந்து களைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்துள்ளது. பவுமா 55 ரன்களுடனும், பியட் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இந்தியத் தரப்பில் அக் ஷர் படேல் இரு விக்கெட்டுகளையும், ஈஸ்வர் பாண்டே, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.