

இங்கிலாந்தின் கவுண்ட்டி கிரிக்கெட் கிளப்பான லங்காஷயர் கிரிக்கெட் கிளப் சேர்மேன் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். இவருக்கு வயது 71.
22 ஆண்டுகளாக இவர் திறம்பட பணியாற்றி வந்தார். முதன் முதலில் 1998-ல் கிளப்புடன் இணைந்து 2017 ஏப்ரல் சேர்மன் பதவி பெற்றார்.
இது தொடர்பாக லங்கா ஷயர் கிரிக்கெட் கிளப் தனது அறிவிப்பில், “டேவிட் தனித்துவமான முறையில் கிளப்புக்கு சேவையாற்றியுள்ளார். பொருளாளர், துணைத் தலைவர், பிற்பாடு சேர்மேன் என்று பெரிய பொறுப்புகளை திறம்படக் கையாண்டார்.
அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் குடும்பத்தாரின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
லங்காஷயர் தலைமைச் செயலதிகாரி டேனியல் கிட்னீ என்பவர் தன் ட்விட்டரில், “நான் உடைந்து நொறுங்கி விட்டேன், என்னுடைய பெரிய நண்பனை இழந்து விட்டேன்” என்று வருந்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் கோலின் கிரேவ்ஸ் கூறும்போது, “லங்கா ஷயர் கிரிக்கெட்டின் மிக முக்கியமான ஒரு அங்கமாகத் திகழ்ந்தார் டேவிட். நாட்டில் விளையாட்டை வளர்க்கவும், இளையோர்களை பெரிதும் ஊக்குவிக்கவும் செய்தார்” என்றார்.
இவருக்கு ஏற்கெனவே சில உடல் பிரச்சினைகள் இருந்ததையடுத்து கரோனா தொற்று இவரின் உயிரைப் பலி வாங்கியுள்ளது.