ராகுல் திராவிடின் பயிற்சிதான் தன்னம்பிக்கை ஏற்படுத்தியது: புஜாரா

ராகுல் திராவிடின் பயிற்சிதான் தன்னம்பிக்கை ஏற்படுத்தியது: புஜாரா
Updated on
1 min read

ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்குரிய கட்டுக்கோப்புடனும், இறுக்கமான தடுப்பாட்டத்துடனும் விளையாடி தொடக்கத்திலிருந்து ஒரு முனையை தக்க வைத்து சதம் அடித்து ஆடிவரும் புஜாரா, ராகுல் திராவிடின் பயிற்சியில் இந்தியா ஏ அணியில் ஆடியதுதான் தான் செய்த சிறப்பான விஷயம் என்று கூறினார்.

ஆட்டம் முடிந்தவுடன் அவர் கூறும்போது, “நமன் ஓஜா மற்றும் அமித் மிஸ்ராவுடனான கூட்டணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அமித் மிஸ்ரா உண்மையில் அருமையாகவே பேட் செய்தார். அவர் மன அமைதியுடன் ஆடினார்.

எனக்கு இடைப்பட்ட காலங்கள் கொஞ்சம் கடினமாக அமைந்தது, ஆனாலும் தொடர்ந்து எனது பேட்டிங்கின் குறைபாடுகளைக் களைவதில் கடும் முனைப்பு காட்டி உழைத்தேன்.

சிறப்பான தருணம் என்னவென்றால் ராகுல் திராவிட் பயிற்சியில் இந்தியா ஏ அணிக்கு ஆடியதுதான். ராகுல் என்னிடம், ‘உங்கள் உத்தியில் எந்த வித பிரச்சினையும் இல்லை. மனத்தெளிவுடன், அமைதியாக விளையாடினால் விரைவில் ஒரு பெரிய சதம் காத்திருக்கிறது’ என்றார். ஒட்டுமொத்தமாக எனது ‘ஸ்ட்ரைக் ரேட்’ மோசமாக இல்லை, எனது கரியர் ஸ்ட்ரைக் ரேட்டும் ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது.

நான் எப்படி விளையாடுகிறேனோ அப்படியே தொடர விரும்புகிறேன். நம்முடைய அணி வரிசையில் அடித்து ஆடும் சில பேட்ஸ்மென்கள் உள்ளனர். நான் எனது இயல்பான ஆட்டத்தையே ஆட விரும்புகிறேன். தொடக்க வீரராக விளையாடுவது கடினம், ஆனால் இந்த வகையிலும் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது”

என்றார் புஜாரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in