

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தேர்வு செய்துள்ளது விருதுக் கமிட்டி.
லியாண்டர் பயஸுக்குப் பிறகு இந்த விருதைப் பெறவுள்ள 2-வது டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆவார். 1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டி யில் ஒற்றையர் பிரிவில் வெண் கலப் பதக்கம் வென்றதற்காக பயஸுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் இரட்டை யர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா, கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரட்டை யர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையடுத்து அவருடைய பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது மத்திய விளையாட்டு அமைச்சகம்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாவின் பெயரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது விருதுக் கமிட்டி. 28 வயதான சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார்.