Published : 27 Mar 2020 02:47 PM
Last Updated : 27 Mar 2020 02:47 PM

ஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட் : எதிர்கொண்ட விதம்: பின் வாங்கிய மியாண்டட்: பேட்டியிலிருந்து ருசிகரம்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு கலகல மனிதர், கலகல கிரிக்கெட் வீரரும் கூட, பேட்டிங்கில் ஆக்ரோஷம் தவிர அவரால் வேறு எதையும் காட்ட முடியாது, எளிதில் எதிரணியினரால் கேலி செய்யக்கூடிய அவரது ஸ்டான்ஸ், கிரீசிற்குள் அவரது நடை, அவரது மேனரிசம் அனைத்தும் தனித்துவமானது என்பதோடு பல வேளைகளில் கேலிக்குரியதாகவும் மாறியுள்ளது.

ஒரு முறை ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னரும் வர்ணனை மேதையுமான ரிச்சி பெனோ ஸ்ரீகாந்த் பந்தை எதிர்கொள்ளும் போது ஸ்ரீகாந்த் இருகால்களையும் அகற்றி குனிந்து நிற்பதை வர்ணிக்கும் போது, ”crouchig stance, great eyes, and very very dangerous" என்று கூறியதை மறக்க முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் ஸ்ரீகாந்த் பேட்டிங்கைப் பார்த்து விட்டு அவர் ஆட்டமிழந்த பிறகுதான் அலுவலகம் செல்பவர்களும் இருந்துள்ளனர். தனது நகைச்சுவை உணர்வு, அனாயசமாக கலாய்த்தல் மூலம் அணி வீரர்களை களத்திலும் ஓய்வறையிலும் கலகலவென்று வைத்திருப்பவர்.

இவர் கேப்டன்சியில்தான் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் தொடரில் அறிமுகமானார், பாகிஸ்தான் சென்று அப்போது 4 டெஸ்ட் போட்டிகளையும் ட்ரா செய்து தோல்வியடையாமல் திரும்பி வந்தவர். இது ஒரு மிகப்பெரிய சாதனை, அப்போதெல்லாம் பாகிஸ்தானுடம் கிரிக்கெட் என்றால் அது போர் போன்றதுதான் ஜெயிக்க முடிகிறதோ இல்லையோ தோற்றால் சிக்கல்தான்.

இந்நிலையில் அவர் 1993ம் ஆண்டு தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில் தான் எதிர்கொண்ட ஸ்லெட்ஜிங் பற்றியும் தனது பதிலடி பற்றியும் குறிப்பிட்டுள்ளது இப்போது வாசித்தாலும் ருசிகரமாக உள்ளது.

அதில் அவர் ஸ்லெட்ஜிங் பற்றிய கேள்விக்குப் பதில் அளிக்கையில், “ஆம் ஸ்லெட்ஜிங் உள்ளது, நானும் அதை எதிர்கொண்டேன். என்னை பொறுத்தவரையில் களத்தில் யாராவது என்னை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தால் அமைதியாக இருந்து பிறகு திருப்பிக் கொடுப்பேன், ஒருமுறை சென்னை டெஸ்ட் போட்டியில் 1986-ல் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ரே பிரைட்டுடன் பிரச்சனை ஏற்பட்டது.

1987-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தேன் (123), அப்போது பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டட் என்னை நோக்கி நான் வெறும் ஸ்லாக்கர் (வெறுமனே மட்டை சுழற்றுபவர், கிரிக்கெட் நுட்பங்கள் அற்றவர் என்ற பொருளில்)என்றார்.

அப்போது நான் அவரிடம் சென்று, ’மிஸ்டர் ஜாவேத் மியாண்டட் நான் உங்களைப் போல் திறமையுடையவனாக இருந்தால் நான் இப்படி ஆடமாட்டேன். அதனால்தான் நீங்கள் ஜாவேத் மியாண்டட், நான் ஸ்ரீகாந்த்’ என்றேன். ஆனால் உடனே ஜாவேத், ‘இல்லை இல்லை ஸ்ரீகாந்த், இல்லை இல்லை நான் சும்மா ஜோக்குக்காக சொன்னேன்’ என்றார். இப்படித்தான் நான் சூழ்நிலையை எதிர்கொள்வேன். இவையெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம், சூழலின் உஷ்ணத்தில் சிலர் சில வார்த்தைகளை பேசுவதை நாம் குற்றம் கூறக்கூடாது, ஆட்டத்தின் ஒரு அங்கமாகும் இது” என்றார் ஸ்ரீகாந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x