

உலக பாட்மிண்டன் சாம்பி யன்ஷிப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.
சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் இருவர் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். சாய்னா 2-வது இடத்திலும், காந்த் 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாய்னா, இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் ஒருமுறைகூட காலிறுதியைத் தாண்டியதில்லை. எனவே இந்த முறை பதக்கம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறார். தரவரிசை அடிப்படையில் முதல் சுற்றில் ‘பை’ பெற்றுள்ள சாய்னா, 2-வது சுற்றில் ஹாங்காங்கின் சியூங் நன் யீ அல்லது எஸ்தோனியாவின் கேத்தி டால்மோஃபுடன் மோதவுள்ளார்.
சாய்னா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் சயாகா டகாஷியை சந்திக்க வாய்ப்புள்ளது. அதில் வெற்றி பெறும்பட்சத்தில் காலிறுதியில் சீனாவின் இகன் வாங்கை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் காந்த், நல்ல பார்மில் இருக்கும் இந்த நேரத்தில் பதக்கம் வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த சீசனில் ஸ்விஸ் ஓபன், இந்திய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் வாகை சூடியிருக்கும் காந்த், தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஃபரிமானை சந்திக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, இந்த சீசனில் காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வந்தாலும் கடந்த காலங்களில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக ஆடி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவர், இந்த முறை முதல் சுற்றில் ‘பை’ பெற்றுள்ளார்.
சிந்து தனது 2-வது சுற்றில் டென்மார்க்கின் லின் கேர்ஸ்பெல்ட் அல்லது அயர்லாந்தின் சோல் மேகீயுடன் மோதவுள்ளார். அதில் வெற்றி பெறும்பட்சத்தில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் லீ ஸியூரூயை சந்திக்க வாய்ப்புள்ளது.
2011 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் ‘பை’ பெற்றுள்ளது. சமீபத்தில் கனடா ஓபனில் வாகை சூடிய ஜுவாலா-அஸ்வினி ஜோடி மீது இந்த முறை பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதவிர ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்டோரும், ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி-சுமீத் ரெட்டி, பிரணவ் சோப்ரா-அக் ஷய் தேவால்கர் ஜோடிகளும், மகளிர் இரட்டையர் பிரிவில் பிரதன்யா காட்ரே-சிக்கி ரெட்டி, தன்யா நாயர்-மோஹிதா சஹ்தேவ் ஜோடிகளும், கலப்பு இரட்டையர் பிரிவில் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன், தருண் கோனா-சிக்கி ரெட்டி ஜோடிகளும் இந்தியாவின் சார்பில் பங்கேற்கின்றன.
உலக சாம்பியன்ஷிப் குறித்து இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், “இந்த முறை பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. எனினும் போட்டி நடைபெறும் தினத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவது அவசியம். இங்கு தரவரிசை என்பது ஒரு விஷயமே அல்ல” என்றார்.