

ஆஷஸ் தொடர் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் சதம் எடுத்து விளையாடி வருகிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.
உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் தனது 11-வது டெஸ்ட் சதத்தை எடுத்து ஒரு முனையில் 110 ரன்களுடன் நாட் அவுட்டாக நிற்கிறார்.
கிளார்க் நேற்று ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித், வோஜஸ் 4-வது விக்கெட்டுக்காக 146 ரன்களைச் சேர்த்தனர். இன்று 287/3 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, வோஜஸ் 47லிருந்து 76 ரன்களுக்கு முன்னேறினார், அப்போது பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர எல்.பி. ஆனார். வோஜஸ் ரிவியூ பலனளிக்கவில்லை.
78 ரன்களில் தொடங்கிய ஸ்மித் தனது அற்புதமான ஆட்டத்தை இன்றும் தொடர்ந்தார். மொயீன் அலி பந்தை மிட் ஆனில் தட்டி விட்டு தனது சதத்தை எட்டினார் ஸ்மித். கிளார்க் பெவிலியனிலிருந்து கரகோஷம் செய்தார். சதம் எடுத்ததை கொண்டாடும் விதமாக மொயீன் அலியை அதே ஓவரில் மேலேறி வந்து அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்தார், லாங் ஆஃபில் பந்து பறந்தது.
மிட்செல் மார்ஷ் மீண்டும் சோபிக்கவில்லை. அவர் 3 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் விட்டு விடவேண்டிய பந்தை ஆட முற்பட பந்து எட்ஜ் ஆகி பெல்லிடம் கேட்ச் ஆனது. ஸ்டீவ் ஃபின் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவர் ஸ்டீவ் ஸ்மித்தையே வீழ்த்தியிருப்பார், ஆனால் அது நோ-பாலானது. 100-வது விக்கெட்டாக ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை தவற விட்டார் ஸ்டீவ் ஃபின்.
மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு மொயீன் அலி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் 18 ரன்களில், ஷார்ட் பிட்ச் பந்தை மோசமாக ஆடி லெக் திசையில் பட்லரிடம் கேட்ச் கொடுத்தார்.
அதே ஓவரில் மிட்செல் ஜான்சன் பவுல்டு ஆனார். ஜான்சன் பந்தை தவறான லைனில் ஆடி மிடில் ஸ்டம்பை இழந்தார். இத்துடன் உணவு இடைவேளை.
ஸ்மித் 110 ரன்களுடன் உள்ளார். ஸ்டீவ் பின் தனது 26-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து தரப்பில் மீண்டும் மொயீன் அலி 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்ற, ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.