விஜய், ரஹானே அபார ஆட்டம்: இந்தியா 266 ரன்கள் முன்னிலை

விஜய், ரஹானே அபார ஆட்டம்: இந்தியா 266 ரன்கள் முன்னிலை
Updated on
2 min read

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது இந்தியா தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த 2 மணி நேர ஆட்டத்தில் இந்தியா 26.4 ஓவர்களில் 109 ரன்களை எடுத்து விஜய் (82), கோலி (10) ஆகியோர் விக்கெட்டை கவுஷாலிடம் இழந்தது. இரண்டுமே எல்.பி.டபிள்யூ.

இன்று ரன் விகிதத்தைக் கூட்டும் முயற்சியுடன் விஜய்யும், ரஹானேயும் கொஞ்சம் விரைவு ரன் எடுப்பில் இறங்கினர். ஆனால் அதற்காக பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்கவில்லை. 2-வது விக்கெட்டுக்காக இருவரும் இணைந்து 140 ரன்களைச் சேர்த்தனர். இதில் நேற்று 29 ஓவர்களில் 70 ரன்கள் என்று நிதானம் காண்பிக்கப்பட்டது. இன்று அதற்கு மாறாக 15 ஓவர்களில் 70 ரன்கள் என்று வேகம் காண்பிக்கப்பட்டது.

14-வது ஓவரில் அடித்த பவுண்டரிக்குப் பிறகு இன்று காலை 32-வது ஓவரில் ரஹானே ஹெராத் பந்தை நன்றாக பின்னால் சென்று மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார். பிறகு விஜய், தம்மிக பிரசாத்தை தேர்ட்மேனில் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு ரஹானே, ஹெராத்தை ஸ்கொயர் லெக்கில் ஸ்வீப் பவுண்டரி அடித்தார். அடுத்ததாக கவர் திசையில் ஹெராத்தை ரஹானே அடித்த ஷாட் சரியான டைமிங், மட்டையில் பந்து பட்டவுடன் பவுண்டரிக்கு தெறித்தது பந்து.

கவுஷால் 7 பீல்டர்களை லெக் திசையில் வைத்துக் கொண்டு ரவுண்ட் த விக்கெட்டில் வீசி வந்தார், இதனையடுத்து ரஹானே ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார். 119 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அவர் அரைசதம் கண்டார். முன்னதாக விஜய் 105 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார்.

40-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் சமீராவை விஜய் அடித்த சிக்ஸ் மிக அற்புதமானது. ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் முழு ஆதிக்கத்துடன் புல் செய்து சிக்ஸ் அடித்தார். பிறகு கவுஷால் பந்தை மேலேறி வந்து டீப் மிட்விக்கெட்டை கிளியர் செய்து இன்னொரு சிக்ஸ் அடித்தார் விஜய்.

கடைசியில் 133 பந்துகளில் 4 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் கவுஷால் பந்தை மிகப்பெரிய ஸ்வீப் ஷாட்டுக்குச் சென்று பந்தை கோட்டை விட்டார், கால்காப்பில் தாக்க எல்.பி. ஆனார். சத வாய்ப்பு பறிபோனது.

கோலி இறங்கி 10 ரன்கள் எடுத்து கவுஷால் பந்தில் எல்.பி.ஆனார். அதிகம் திரும்பாத ஆஃப் பிரேக் பந்து சறுக்கிக் கொண்டு சென்றது கோலி பின்னால் சென்று ஆட முயன்றார் பந்து மட்டையைக் கடந்து பேடைத் தாக்கியது. ரவுண்ட் த விக்கெட்டில் லெந்தில் ஸ்டம்புக்கு நேராக பிட்ச் ஆகி நேராகச் சென்றது. கோலி பிளம்ப் எல்.பி.ஆனார்.

உணவு இடைவேளையின் போது ரஹானே 82 ரன்களுடனும், ரோஹித் சர்மா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இந்தியா இதுவரை 266 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in