

கரோனா வைரஸ் மரணமும் தொற்றும் அதிகரித்து கோவிட்-19 வைரஸின் புதிய மையமாகத் திகழும் இத்தாலி பக்கமே பலரும் செல்ல பீதி கொள்ளும் நிலையில் மார்ச் 22-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் சென்ற குழு 263 இந்தியர்களை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்து சேர்த்தது.
அந்த வரலாற்றுக் கணத்தில் பங்காற்றிய குழுவில் முன்னால் டெல்லி, அசாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுக்விந்தர் சிங்கும் ஒருவர், இதனையடுத்து இவரது தைரியத்துக்கும் உறுதிக்கும் பெரிய பாராட்டு கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் ஸ்வாதி ராவல் மற்றும் கேப்டன் ராஜா சவுகான் ஆகியோரைப் பாராட்டினார். இந்த தைரிய ரிஸ்க் எடுக்கும் ஒரு சேவையை செய்தவர்களில் முன்னாள் டெல்லி, அசாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுக்விந்தர் சிங்கும் ஒருவர்.
இவர் தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்குக் கூறும்போது, “நான் விளையாடாத போது பறந்து கொண்டிருந்தேன். எனக்கு இது போன்ற சவால்களை எடுத்துக் கொள்ள தைரியமூட்டியது கிரிக்கெட்தான். இத்தாலியில் சிக்கியுள்ள ‘எதிர்கால இந்திய’தலைமுறையைக் காப்பாற்ற எனக்கு அளிக்கப்பட்ட பணி தேசத்தின் அழைப்பு. வாழ்விலே ஒரேயொரு முறைதான் இப்படிப்பட்ட தேச சேவை வாய்ப்பு கிடைக்கும்.
ஏர் இந்தியா இந்தக் காலக்கட்டத்தில் பெரிய சேவை செய்து வருகிறது, வூஹான், மிலன், ஆகிய கரோனா மையங்களிலிருந்து இந்தியர்களை மீட்டு வருகிறது. இந்தக் குழுவில் நானும் ஒரு சிறு பங்காற்றுகிறேன் என்பது பெருமையளிக்கிறது.
எங்களுக்கு அனைத்து பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்பட்டன, எனக்கு ஒரு பயமும் இல்லை, ஒரு கிரிக்கெட் வீரன் என்பதால் நெருக்கடிகள் பழகி விட்டன. இங்கு வந்தவுடன் மீட்கப்பட்டவர்களின் கண்களில் கண்ணீரும், மகிழ்ச்சியும் கலந்திருந்ததைப் பார்க்க முடிந்தது” என்கிறார் சுக்விந்தர் சிங்.
இவர் 1986-2004-ல் முதல் தரக் கிரிக்கெட்டில் ஆடியுள்ளார். 47 போட்டிகளில் 148 விக்கெட்டுகள் மற்றும் 2076 ரன்கள், இதில் 4 சதங்கள் அடங்கும்.