

1992 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியை விட 1999 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிதான் சிறந்தது, அதாவது ‘இம்மி ஆர்மி’ என்று அழைக்கப்பட்ட இம்ரான் கான் தலைமை உ.கோப்பை வென்ற பாக். அணியை விட வாசிம் அக்ரம் தலைமை பாகிஸ்தான் அணிதான் சிறந்தது என்று பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கான் தெரிவித்தார்.
1992 உலகக்கோப்பையில் ஒரு வெற்றி 3 தோல்வி, ஒரு அதிர்ஷ்ட வாஷ் அவுட் என்ற நிலையில் பாகிஸ்தான் இருந்தது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தான் அதிர்ஷ்டவசமாக மழையினால் ஆட்டம் கைவிடப்பட புள்ளிகள் பகிரப்பட்டது. இதுதான் பாகிஸ்தான் அதிர்ஷ்டம் என்பது.
அந்த உலகக்கோப்பை குறித்து மொயின் கான் தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்காக நினைவுகூர்ந்த போது, “முதல் சில போட்டிகள் மோசமாக ஆடினோம். 3 புள்ளிகள்தான் பெற்றிருந்தோம். அப்போதுதான் கேப்டன் இம்ரான் ஒரு அணிக்கூட்டத்தை நடத்தி அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டார். அப்போது வீரர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்களோ அதை களத்தில் கடைபிடித்தோம்.
ஒருமுறை வீரர்கள் தங்கள் மனம் விட்டு பேசியதால் எந்த பகுதியில் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது வீரர்களுக்கே புரிந்தது. மார்ச் 11ம் தேதியன்று ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தினோம் ஆமிர் சொஹைல் 76 ரன்கள் எடுத்தார், அகிப் ஜாவேத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இம்ரான் அணியில் மிகச்சிறந்த சூழலை உருவாக்கினார். தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். அந்தப் போட்டிக்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.
அங்கிருந்து எங்களை யாரும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை பிறந்தது. என் வாழ்நாளின் திருப்பு முனை அதுதான். எனக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும்தான்.
அரையிறுதியில் தோல்வியே அடையாத நியூஸி.யை எதிர்கொண்டோம், அந்த அணியில் எனக்கு இடம் கிடைத்தது பெரிய விஷயம் (11 பந்துகளில் 20 அடித்தார்), கிறிஸ் ஹாரிஸ் பந்தை எக்ஸ்ட்ரா கவருக்குமேல் மிகப்பெரிய சிக்சரை விளாசினேன் நன்றாக நினைவிருக்கிறது.
ஆனாலுமே 1992 உலகக்கோப்பை வென்ற சாம்பியன் அணி பாகிஸ்தானின் சிறந்த அணியல்ல, மாறாக 1999 உலகக்கோப்பையில் வாசிம் பாய் தலைமை அணிதான் சிறந்த பாகிஸ்தான் அணி. 1996 அணி கூட நல்ல அணிதான், ஆனால் எனக்கு 1999 அணிதான் பிடிக்கும். ஆனால் ஆஸி.யிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தோம்.
மார்ச் 25 பாகிஸ்தான் அணிக்கு மறக்க முடியாத தினம். 30 ஆண்டுகள் முடிந்து விட்டன, ஆனால் இன்று கூட அந்தக் கணம் பசுமையாக நினைவில் உள்ளது” என்றார் மொயின் கான்.