

பிரேசில் நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் கரோனா வைரஸ்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ நகரில் பக்கெம்பு கால்பந்து மைதானம் உள்ளது. சுமார்45 ஆயிரம் இருக்கைகள் கொண்டஇந்த மைதானத்தை கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக தற்காலிக மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறைந்த அளவில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 200-க்கும்மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் இந்த பணிகள் 10 நாட்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானமானது சாவோ பாலோ நகரில் உள்ள பல முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ளது.
சாவோ பாலோ நகரில்தான் கரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை பிரேசில் நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். 1,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அச்சம் அடைந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சை அளிப்பதற்காக 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக பிரேசிலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மைதானங்களையும்
திறந்த வெளி மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களாக மாற்றிக் கொள்ள பல்வேறு கிளப்கள் முன்வந்தன. இதன் ஒருகட்டமாகவே பக்கெம்பு கால்பந்து மைதானம் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து பிரேசில் நாட்டில் நடைபெற்று வந்த அனைத்து விதமான தொழில்முறை கால்பந்து போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.