

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நீண்ட நாட்களாக முதல் 10 இடங்களுக்குள் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் பவுலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 8-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வினுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வுபெற்ற இலங்கை வீரர் குமார் சங்ககாரா 7-வது இடத்தில் உள்ளார். 2007 டிசம்பரில் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த சங்ககாரா 812 நாட்கள் மற்றும் 97 டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இருந்துள்ளார்.
கடைசியாக 2014 டிசம்பரில் அவர் முதலிடத்தில் இருந்தார். 2007 டிசம்பரில் தனது அதிகபட்ச (938 புள்ளிகள்) தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றார் சங்ககாரா. அதுதான் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச தரவரிசைப் புள்ளி.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரோடு ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 25-வது இடத்தில் உள்ளார். 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கிளார்க் 2009 ஆகஸ்டில் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்தார். கடைசியாக 2013 பிப்ரவரியில் முதலிடத்தில் இருந்தார். 70 நாட்கள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் முதலிடத்தில் இருந்துள்ளார்.
சர்வதேச அளவில் 900 தரவரிசைப் புள்ளிகளை எட்டிய 30 வீரர்களில் கிளார்க்கும் ஒருவர். ஆஸ்திரேலிய வீரர்களில் கிளார்க்கோடு சேர்த்து மொத்தம் 8 பேர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இந்திய வீரர்களில் அஜிங்க்ய ரஹானே இரு இடங்கள் முன்னேறி 20-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும். கே.எல்.ராகுல் 30 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தையும், விருத்திமான் சாஹா 15 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பவுலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் 2 இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். கொழும்பு டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இலங்கையின் ரங்கனா ஹெராத்தை பின்னுக்குத்தள்ளி 769 புள்ளிகளுடன் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் அமித் மிஸ்ரா 42 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் நியூஸிலாந்தை பின்னுக்குத்தள்ளி 5-வது இடத்தைப் பிடிக்கும். இலங்கை 2-1 என தொடரைக் கைப்பற்றினால் அந்த அணி, இந்தியாவை பின்னுக்குத்தள்ளி 6-வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை தொடர் 1-1 என சமனில் முடிந்தால் இந்தியா தொடர்ந்து 6-வது இடத்திலேயே இருக்கும்.