

ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
தொடரை இழந்தாலும் கடைசிப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் கிறிஸ் ரோஜர்ஸ் விடைபெற்றனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில், ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 125.1 ஓவர்களில் 481 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 143 ரன்கள் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 48.4 ஓவர்களில் 149 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்ஷெல் ஜான்சன், மார்ஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பாலோ ஆன் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை ஆடியது. மைக்கேல் கிளார்க் கேப்டனாக எதிரணிக்கு வழங்கும் முதல் பாலோ ஆன் இதுவாகும்.
மூன்றாம் ஆட்டத்தில், தேநீர் இடைவேளைக்குள் இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க கேப்டன் குக் போராட்டம் நடத்தினார். ஆனால் மறுமுனையில் அவருக்கு யாரும் உதவவில்லை. பேர்ஸ்டோவ் 26, லையன் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குக் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 79 ஓவர்களுக்கு 203 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்னிங்ஸ் தோல்வி
நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வுட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது போராடிய பட்லரும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு முகமது அலி, ஸ்டூவர்ட் பிராட் ஜோடி சேர்ந்தனர்.
96-வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 258 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் பிராட் 11 ரன்களிலும், மொயீன் அலி 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் சிடில் வீழ்த்தினார். இங்கிலாந்து 101.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றி பெற்றது. தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்றது.