

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியா ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக கனடா ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஜப்பானின் டோக்கியா நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு ஒலிம்பிக் சங்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை வைத்தன. முதலில் இதற்கு செவிசாய்க்க மறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எப்போது நடத்த வேண்டும் என்ற முடிவு 4 வாரங்களுக்குள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது. இதுகுறித்து கனடா ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “இது விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்தை பற்றியது மட்டும் அல்ல, பொது மக்களின் சுகாதாரத்தை பற்றியது.
கரோனா வைரஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் எங்களது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பானது அல்ல. ஒலிம்பிக் போட்டியை நோக்கியபயிற்சிகள் வீரர்களின் உடல் நலனுக்கும், அவர்களின் குடும்பங்களின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பானது இல்லை.
எனவே டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளுக்கு கனடா அணியை அனுப்பக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.