

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியோடு கிரிக்கெட்டி லிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ள நிலையில், 37 வயதான கிறிஸ் ரோஜர்ஸ் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக ஆச்சர்யமளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடிவிட்டேன். மிகவும் ரசித்து விளையாடினேன். சில நல்ல விஷ யங்களில் நானும் பங்கெடுத்தேன். எனினும் எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு உண்டு என்றார்.
கிளார்க்குடன் இணைந்து ஓய்வுபெறவுள்ள தனது முடிவு குறித்துப் பேசிய ரோஜர்ஸ், “எந்த விஷயத்திலும் ஒருபோதும் 100 சதவீதம் உறுதியாகக்கூற முடியாது. ஆனால் 5-வது டெஸ்ட் போட்டி எனது கடைசி போட்டி என நான் உணர்ந்தேன். அது தொடர்பாக சில விஷயங் கள் நடந்தன. சமீபத்தில் நான் போட்டியின்போது மயக்க மடைந்தேன்.
எனவே எனது ஓய்வு முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியே. நீங்கள் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என கூறுவார்கள். நான் ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணம் என உணர்ந்திருக்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சில மாற்றங்கள் செய்து இளம் வீரர்களை அணியில் சேர்ப்பதற் கான தருணம் இது” என்றார்.
ரோஜர்ஸுக்கு ஓவல் டெஸ்ட் போட்டி 25-வது போட்டியாகும். 2008-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஜர்ஸ், தனது 2-வது போட்டியில் ஆடுவதற்காக 2013 வரை காத்திருக்க நேரிட்டது. 2013-ல் மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், 5 சதங்களை அடித்துள்ளார்.