

அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து 3-வது முறையாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜான் இஸ்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த சைப்ரஸின் மார்கஸ் பாக்தாதிஸைத் தோற்கடித்தார்.
பரிசளிப்பு விழாவின்போது தனது அருகே நின்ற பாக்தாதிஸைப் பார்த்துப் பேசிய ஜான் இஸ்னர், “இறுதிச்சுற்றின்போது நீங்கள் முழு உடற்தகுதியுடன் இல்லாதது துரதிர்ஷ்டவசமானதாகும். இதுபோன்ற சூழலில் வெல்வதை நான் விரும்புவதில்லை. காயமடைந்தபோதிலும் நீங்கள் உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். உங்களுக்கு எதிராக ரசித்து விளையாடினேன்.
இறுதி ஆட்டத்தைப் பொறுத்த வரையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பது அவசியம் என்றும், எனது இயல்பான ஷாட்களை ஆட வேண்டும் என்றும் நினைத்தேன். இந்த ஆட்டம் முழுவதும் நினைத்து போலவே ஆடியதாக நினைக்கிறேன்” என்றார்.
தோல்வி குறித்துப் பேசிய பாக்தாதிஸ், “தோல்வியில் ஆட்டத்தை முடிக்க நான் விரும்பியதில்லை. எனினும் எனது உடல் ஒத்துழைக்கவில்லை. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் தொடர்ந்து எனக்கு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் 5 ஆட்டங்களில் ஆடியிருக்கி றேன்.
ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் வெற்றிக்கான வழியை கண்டுபிடித்ததில் மகிழ்ச்சியே” என்றார்.