

ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வருகிறேன் என்று இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல போட்டிகள் தள்ளிவைக்கப் பட்டுள்ளன.
பயிற்சி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்து கவலைப்படாமல் ஒலிம்பிக் போட்டிக்காகத் தயாராகிவருகிறேன். கரோனா வைரஸைத் தடுக்க உலகம் முழுவதும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போட்டிகளை ரத்து செய்வது அல்லது தள்ளிப் போடுவதுதான் சிறந்த வழி.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஎச்ஓ) கூறும் விதிமுறைகளை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்.
கடந்த சில நாட்களாக டெல்லி முகாமிலேயே தங்கியிருந்தேன். தற்போது வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் நம்பிக் கையை கைவிடாது தொடர்ந்து பயிற்சி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ