

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 முறை சாம்பியனான பிரபல கார் பந்தய வீரரான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
லண்டனில் இந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் இட்ரிஸ் எல்பா மற்றும் கனடா நாட்டின் பிரதமரின் மனைவி சோஃபி கிரேகோயர்-ட்ரூடோ உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் 35 வயதான பிரபல கார் பந்தய வீரரான லீவிஸ் ஹாமில்டனும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இட்ரிஸ் எல்பா, சோஃபி கிரேகோயர்-ட்ரூடோ ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுடன் விழாவில் பங்கேற்ற லீவிஸ் ஹாமில்டன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக லீவிஸ் ஹாமில்டன் விடுத்துள்ள அறிக்கையில், “நான் உடல் நலத்துடன் இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கலந்து கொண்ட லண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து எனது உடல் நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. வைரஸ் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் என்னிடம் இல்லை. இட்ரிஸ் எல்பா, சோஃபி கிரேகோயர்-ட்ரூடோ ஆகியோரை சந்தித்து 17 நாட்கள் ஆகிவிட்டன.
இட்ரிஸ் எல்பாவை தொடர்பு கொண்டேன். அவர் நலமுடன் இருப்பதாக கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது மருத்துவரிடம் பேசினேன். எனக்கு பரிசோதனை செய்ய வேண்டுமா? என இருமுறை கேட்டேன். ஆனால்இங்கு உண்மை நிலை என்னவெனில் குறிப்பிட்ட அளவிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்னைவிட அதிகமானோருக்கு பரிசோதனைகள் தேவைப்படுகின்றன” என கூறப் பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான பார்முலா 1 சீசன் கடந்த 14-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜூன்7-ம் தேதி வரை முதல் சுற்று தொடங்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. - ஏஎப்பி