Published : 22 Mar 2020 09:58 AM
Last Updated : 22 Mar 2020 09:58 AM

விராட் கோலி தரமான பேட்ஸ்மேன்: ஜாவித் மியான்தத் பாராட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன் எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜாவித் மியான்தத்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டனான ஜாவித் மியான்தத் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி குறித்து கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர் யார் என்று என்னிடம் கேட்டால் விராட் கோலி என்றுதான் கூறுவேன். அவரைப் பற்றி நான் அதிகம் கூற வேண்டியது இல்லை. அவரது செயல்திறன்களே அவர்யார் என்பதை கூறும். புள்ளி விவரங்களும் இதையே கூறுவ தால் மக்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். விராட் கோலி தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் சீரற்ற ஆடுகளத்தில் சதம் அடித்தார்.

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பயப்படுகிறார் அல்லது பந்து எகிறி வரும் ஆடுகளங்களில் விளையாட முடியாது அல்லது சுழற்பந்து வீச்சு எதிராக சிறப்பாக விளையாட முடியாது என எந்தவித குறைகளையும் விராட் கோலியை பார்த்து கூற முடியாது. விராட் கோலி பேட்டிங்கில் வெளுத்துக்கட்டக் கூடியவர். அவர் விளையாடும் ஷாட்களை பார்க்க நன்றாக இருக்கிறது. விராட் கோலி தரமான வீரர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விராட் கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,240 ரன்களையும் 248 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 11,867 ரன்களையும் 82 சர்வதேச டி 20 ஆட்டங்களில் பங்கேற்று முறையே 2,794 ரன்களையும் குவித்துள்ளார்.

இருப்பினும் சர்வதேச மட்டத்தில் விராட் கோலியின் சமீபத்திய பார்ம் அவரது தரநிலைக்கு தகுந்தபடி இல்லை. அனைத்து வடிவிலும் சேர்த்து கடைசியாக விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் விராட் கோலி வெறும் 218 ரன்களை சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x