

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்ரல்15-ம் தேதி வரை வீரர்கள் தேர்வு, விளையாட்டு போட்டிகள் எதையும் நடத்தவேண்டாம் என அனைத்து மாநிலவிளையாட்டு சங்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது மத்தியவிளையாட்டுத்துறை அமைச்சகம்.
அதேவேளையில் ஒலிம்பிக்போட்டிக்கான தேர்வில் உள்ள வீரர், வீராங்கனைகள் மற்றவர்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமானது இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து மாநில விளையாட்டு சங்கங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், “அனைத்து விளையாட்டு அமைப்புகளும் அவற்றின் துணை பிரிவுகளும் ஏப்பரல் 15-ம் தேதி வரை எந்தவித போட்டிகளையும், வீரர்கள் தேர்வையும் நடத்த வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி முகாமுக்குள் சரியான நெறிமுறைகளை கடைபிடிக்காதவெளிநபர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் இந்த அறிவுரையால் பாட்டியாலாவில் இன்று திட்டமிட்டபடி இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் நடைபெறுமா? என்பதில் சந்கேதம் எழுந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வீரர்களை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
- பிடிஐ