முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சில் திணறும் இலங்கை 65/5

முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சில் திணறும் இலங்கை 65/5
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இலங்கை உணவு இடைவேளையின் போது வெறும் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறைந்த இடைவேளையில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்டிங்கை நிலைகுலையச் செய்தார். வீச்சாளர் இஷாந்த் சர்மா போட்டியின் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது.

10 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்திருந்தது. 12-வது ஓவரை வீச வந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 3-வது பந்திலேயே நட்சத்திர வீரர் சங்கக்காரவின் விக்கெட்டை வீழ்த்தினார். சங்கக்காராவின் பேட்டில் பட்டு ஸில்லி பாய்ண்டில் நின்றிருந்த ராகுலின் இடது பக்கம் பந்து சென்றது. அதை ராகுல் அற்புதமாகப் பிடித்து சங்கக்காராவை ஆட்டமிழக்க வைத்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே திரிமன்னே 13 ரன்களுக்கு அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சூழலில் இலங்கை வீரர் முபாரக்கை 0 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அஸ்வின் தனது மூன்றாவது விக்கெட்டை கைப்பற்றினார்.

உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சந்திமல், மாத்யூஸ் இருவரும் களத்தில் உள்ளனர். இதுவரை 6 ஓவர்களை வீசியுள்ள அஸ்வின் 15 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

முன்னதாக, துவக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் சில்வா இருவரது விக்கெட்டுகளையும், முறையே இஷாந்த் சர்மாவும், வருண் ஆரோனும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா உட்பட மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இலங்கை நட்சத்திர வீரர் சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in