Last Updated : 18 Mar, 2020 07:14 PM

 

Published : 18 Mar 2020 07:14 PM
Last Updated : 18 Mar 2020 07:14 PM

மறக்க முடியுமா இந்த நாளை? கடைசிப் பந்தில் தினேஷ் கார்த்திக்கின் சிக்ஸர்; கோப்பையை வென்ற இந்தியா: நாகினி டான்ஸ் ஆட முடியாமல் போன வங்க வீரர்கள்

வின்னிங் ஷாட் அடித்த தினேஷ் கார்த்திக் : கோப்புப்படம்

நன்றாக நினைவிருக்கிறது...

1986-ம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதி ஆட்டம். ஷார்ஜாவில் நடந்த போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மல்லுக்கட்டிய அந்த ஆட்டத்தை மறக்க முடியாது.

கடைசிப் பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு விக்கெட் வேண்டும். பாகிஸ்தானின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. மியான்தத் பேட்டிங் செய்ய கடைசிப் பந்தை இந்திய வீரர் சேட்டன் ஷர்மா வீசினார்.

அனைத்து ரசிசர்களும் இருக்கையின் நுனியில் இருக்கச் செய்தது இந்த ஆடட்டம். கடைசி ஒவரின் கடைசிப் பந்தை சேட்டன் ஷர்மா யார்க்கராக வீச மியான்தத் பவுண்டரிக்கு அடிக்க ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் சென்றது. ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் தட்டிச் சென்றது.

இந்த ஆட்டத்தை நினைவுபடுத்தியது 2018-ம் ஆண்டு. இந்தியா, வங்கதேசம் இடையிலான நிடாஹஸ் கோப்பையின் இறுதிப் போட்டி.

அதிலும் தினேஷ் கார்த்திக் கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர்தான் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. 8 பந்துகள் 3 சிக்ஸர், 2 பவுண்டரி என 29 ரன்களுடன் காட்டடி அடித்த டிகேயின் ஆட்டம் என்றும் பசுமையான நினைவுகளாக இருக்கும்.

மியான்தத்தின் ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வீடியோவில் பார்த்தாரா என்னவோ மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியைக் கரை சேர்த்தார்.

வங்கதேச அணிக்கு எதிராக நிடாஹஸ் கோப்பையில் இந்திய அணி வென்ற நாள் இன்றுதான். 2018, மார்ச் 18-ம் தேதியில் நடந்த இறுதி ஆட்டத்தையும், டிகேயின் ஆட்டத்தையும் மறக்க முடியுமா?

இந்திய அணியில் நீண்ட நாட்களாக இடம்பெறாத சூழலில் உள்நாட்டுத் தொடரிலும், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார் தினேஷ் கார்த்திக். நீண்ட இடைவெளிக்குப் பின்புதான் இந்த நிடாஹஸ் தொடருக்கு இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

தன்னைத் தேர்வு செய்தது சரியானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார்.

அதிலும் பைனலில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழக வீரர்களின் ஆட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கியபோது மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி இருந்தது. அனைத்து அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் சமாளித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று டி.கே. அடுத்த ஒரு சுற்று வலம் வந்தார்.

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் நிடாஹஸ் டி20 கோப்பை நடத்தப்பட்டது. இலங்கை, வங்கதேசம், இந்திய அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடராக நடத்தப்பட்டது.

வழக்கமான கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கி அனைத்து ஆட்டங்களிலும் அருமையாக விளையாடியது. ஒரு ஆட்டத்தில் மட்டும் இலங்கை அணியிடம் தோற்றது.

இறுதிப் போட்டிக்கு முன்பாக வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு பெரும் சர்ச்சையானது.

வங்கதேச வீரர்கள் இலங்கையில் உள்ள ஓய்வறையின் கண்ணாடிகளை உடைத்து சர்ச்சையில் சிக்கினார்கள். இந்தத் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது வங்கதேச வீரர்களின் பாம்பு டான்ஸ்தான்.

எதிரணி வீரர்கள் ஆட்டமிழந்து செல்லும்போது அவர்களை வெறுப்பேற்றும் வகையில் நடனமாடும் செயல் பெரும் சர்ச்சையானது. இலங்கை வீரர்களுக்கும், வங்கதேச வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது இந்தச் சம்பவத்தால்தான். இதனால் வங்கதேச வீரர்களின் நாகினி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிக்கி விடக்கூடாது என்று தீர்க்கமாக இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் 2014-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் வங்கதேச வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிதீர்க்கும் வகையில் இந்தியாவுடனான இறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி இருந்தார்கள்.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணியில் அதிபட்சமாக சபிர் ரஹ்மான் 77 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் உனத்கட் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கராரர் தவன் 10 ரன்களில் வெளியேறினார். ரோஹித் சர்மாவுடன் சேர்ந்த ரெய்னாவும் நிலைக்கவில்லை. டக் அவுட்டில் ரெய்னா ஏமாற்றினார்.

கே.எல். ராகுல், ரோஹித் சர்மா ஓரளவுக்கு அடித்து ஸ்கோரை நகர்த்தினர். ராகுல் 24 ரன்களிலும் ரோஹித் சர்மா 56 ரன்களிலும் வெளியேறினர். 98 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டம் வங்கதேச அணியின் பக்கம் சென்றது.

5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் இருவரும் சேர்ந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்டத்தைக் கொண்டு சென்றதால் வங்கதேச வீரர்கள் மனம் தளர்ந்தார்கள். கடைசி மூன்று ஓவர்கள்தான் ஆட்டத்தின் முக்கியமான கட்டமாகும்.
28 ரன்களில் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்க மீண்டும் ஆட்டம் வங்கதேசம் பக்கம் திரும்பியது.

12 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. மிகவும் இக்கட்டான, நெருக்கடியான சூழலில் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். நீண்டநாட்களுக்குப் பின் கிடைத்த வாய்ப்பையும் விடக்கூடாது, அதேசமயம் அணியையும் வெல்ல வைக்க வேண்டும் என்ற அழுத்தம் தினேஷ் கார்த்திக் முகத்தில் தெரிந்தது.

19-வது ஓவரை ருபெல் ஹூசைன் வீசினார். தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். முதல் பந்தில் லாங் ஆனில் சிக்ஸர், 2-வது பந்தில் லாங் ஆன் திசையில் பவுண்டரி, 3-பந்தில் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர் என அடித்து தினேஷ் கார்த்திக் பட்டையைக் கிளப்பினார்.

4-வது பந்தில் ரன் எடுக்காமல் 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் தினேஷ் கார்த்தில். கடைசிப் பந்தில் லாங் லெக்கில் மீண்டும் பவுண்டரி அடித்து இந்தியர்களைக் குஷிப்படுத்தினார். இந்த ஒரு ஓவரை கிழித்துத் தொங்கவிட்ட கார்த்திக் 22 ரன்கள் சேர்த்தார்.

கடைசி ஓவர் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் விஜய் சங்கரும் தினேஷ் கார்த்திக்கும் இருந்தனர். அனுபவ வீரர் சவுமியா சர்க்கார் பந்து வீசினார்.

முதல் பந்து வைடாகச் செல்ல, அடுத்த பந்தில் ரன் ஏதும் விஜய் சங்கர் எடுக்கவில்லை. 2-வதுபந்தில் ஒரு ரன் எடுக்க தினேஷ் கார்த்திக் வந்தார். 3-வது பந்தில் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் விஜய் சங்கர் பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

ஆனால், அடுத்த பந்தில் மெஹதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து விஜய் சிங்கர் 17 ரன்களில் வெளியேறினார். ஆட்டம் வங்கதேசம் பக்கம் சென்றது.

கடைசி ஒருபந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தினேஷ் கார்த்திக் பந்தை எதிர்கொண்டார். ஆட்டத்தின் முடிவு எப்படிப் போகுமோ என்ற பதற்றத்துடன் மூன்று நாட்டு ரசிகர்களும் காத்திருந்தார்கள்.

சவுமியா சர்க்கார் வீசிய புல்டாஸ் பந்தை கார்த்திக் மடக்கி லெக் திசையில் சிக்ஸர் அடிக்க மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் அனைவரும் ஓய்வறையில் துள்ளிக் குதித்தனர்.

மீண்டும் 1986-ம் ஆண்டு வரவிடாமல் தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான சிக்ஸர் இந்திய அணியைக் காப்பாற்றியது, கோப்பையையும் வென்று கொடுத்தது. இந்திய அணியின் வெற்றி இந்திய ரசிகர்களால் மட்டுமின்றி இலங்கை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

வங்கதேச வீரர்களை பழிவாங்கக் காத்திருந்த ரசிகர்கள் இந்திய வீரர்களைப் பாராட்டி வங்கதேசத்தைப் பழிதீர்த்துக்கொண்டார்கள்.

8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி என 29 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாகத் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x