Published : 18 Mar 2020 08:29 AM
Last Updated : 18 Mar 2020 08:29 AM

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு வைரஸ் தொற்று?

கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தன்னிடம் காணப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த தொழில்முறை டி 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தார். கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த சனிக்கிழமை திடீரென,பாகிஸ்தானில் இருந்து தாயகம் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்திருக்கலாம் அதனால் தான் அவர்,பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுச்சென்றிருக்கக்கூடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்ரமீஸ் ராஜா கருத்து தெரிவித்திருந்தார். இது உலக கிரிக்கெட்வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் தன்னிலை விளக்கம் ஒன்றை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “மற்ற வெளிநாட்டு வீரர்களை போலவே நானும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரில் இருந்து வெளியேறினேன். ஏனெனில் கோவிட் 19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் இந்த சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பதை விட குடும்பத்தினருடன் இருப்பதே முக்கியமானது என்பதை உணர்ந்தேன்.

கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நான் இங்கிலாந்து திரும்பினேன். அப்போது உடல் நிலை ஆரோக்கியமாக இருந்தது. வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும் ஞாயிற்றுகிழமை எழுந்த போது காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல்களின் படி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக வறண்ட மற்றும் தொடர்ச்சியான இருமல் உள்ளது.

தற்போதைய சூழலில் பரிசோதனை செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இன்றைய நாளின் பிற்பகுதியில் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம். அப்போது தான்எனது உடல்நிலை குறித்துஉறுதியான தகவலை பெறமுடியும்” என தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், வறண்ட இருமல் ஆகியவை கோவிட் 19 வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.70லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல் தொடரானது நாக் அவுட் சுற்றை எட்டியிருந்தது. லாகூரில் இன்று (18-ம் தேதி) அரை இறுதி ஆட்டங்களையும், நாளை (19-ம் தேதி) இறுதிப் போட்டியையும் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் இருந்து வெளியேறியதை தொடர்ந்தும் கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x