Published : 17 Mar 2020 08:22 AM
Last Updated : 17 Mar 2020 08:22 AM

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல்; தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்: ஜெர்மனியில் இருந்தபடி வர்ணனையில் ஈடுபட முடிவு

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல், பயணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ஜெர்மனியில் இருந்து தாயகம் திரும்புவதை நிறுத்தி வைத்துள்ள இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த்,இருந்த இடத்தில் இருந்தே ரஷ்யாவில் நடைபெற உள்ள செஸ் போட்டிக்கு வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரபல இந்திய செஸ் நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்த், ஜெர்மனியில் நடைபெற்ற பன்டெஸ்லிகா செஸ் தொடரில் கலந்து கொண்டார். இந்தத் தொடரை முடித்துக் கொண்டு நேற்று அவர், சென்னை திரும்புவதாக பயணத் திட்டங்களை அமைத்திருந்தார்.

தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) ரஷ்யாவின் யேகாட்டெரின்பர்க் நகரில் தொடங்கும் ஃபிடே செஸ் தொடரில் இணையதளம் ஒன்றுக்காக வர்ணனையாளராக செயல்படவும் திட்டம் வைத்திருந்தார். முதன்முறையாக விஸ்வநாதன் ஆனந்த் வர்ணனை செய்ய உள்ளது சற்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கோவிட் 19வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகஜெர்மனி நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தாயகம்திரும்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்குஅருகே தங்கியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் வசிக்கும் விஸ்வநாதன் ஆனந்தின் மனைவி அருணா கூறும்போது, “தற்போது பிராங்க்பேர்ட் அருகே விஸ்வநாதன் ஆனந்த் தங்கியுள்ளார். வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளதால் அனைத்து பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளுடன், அவர் தாயகம் திரும்பும் திட்டங்களுக்காக காத்திருக்க வேண்டும்.

ஃபிடே கேன்டிடேட்ஸ் செஸ் தொடரில் இணையதளம் ஒன்றுக்காக விஸ்வநாதன் ஆனந்த் வர்ணனை செய்ய உள்ளார். இதுஅவரை ஓய்வில்லாமல் வைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சமூக தொடர்பில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.

உங்களை நீங்களே பணயம் வைத்து மற்ற அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்துவதை விட தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது மிகவும் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது. இது ஒரு விதிவிலக்கான நிலைமை. ஆனால் தொழில்நுட்ப உதவியுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.

தொலைபேசி, வீடியோ அழைப்புகள் மூலம் அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். அகிலும்(விஸ்வநாதனின் மகன்) தொலை பேசி, வீடியோ அழைப்புகள் மூலம் தந்தையுடன் உரையாடி வருகிறான். நேற்றுடன் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால் அகிலுக்கு அதிக நேரம் உள்ளது. இதன் மூலம் அவன், தனது தந்தையுடன் அதிக நேரம் தொடர்பில் இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

கோவிட் 19 வைரஸ் தொற்றுஉலகம் முழுவதும் விளையாட்டுத்துறையை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு சர்வதேச அளவில் நடைபெற உள்ள பெரும்பாலான விளையாட்டுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டு வருகின்றன.

சீனாவில் இருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x