Published : 17 Mar 2020 08:20 AM
Last Updated : 17 Mar 2020 08:20 AM

ஐபிஎல் பயிற்சி முகாம்கள் ரத்து: மூடப்பட்டது பிசிசிஐ அலுவலகம்

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் அணிகளின் பயிற்சி முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுள்ளன.

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 29-ம்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளின் பயிற்சி முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தங்களது பயிற்சி முகாமை ஏற்கெனவே ரத்து செய்திருந்தன. இந்நிலையில் எஞ்சிய 5 அணிகளும் பயிற்சி முகாமை ரத்து செய்துள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு மார்ச் 21-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சி முகாம் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் வழி காட்டுதல்களை அனைவரும் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு விசா நிறுத்தி வைப்பு, 3 மாநிலங்கள் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரை தள்ளி வைக்கும் முடிவை கடந்தவெள்ளிக்கிழமை பிசிசிஐ எடுத்திருந்தது.

வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 2 பேர் இறந்துள்ள நிலையில் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து பணி...

இதற்கிடையே கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள பிசிசிஐ-யின் தலைமை அலுவலகம் மூடப்பட்டது. இதனால் ஊழியர்கள் அனைவரும் இன்று (செவ்வாய் கிழமை) முதல் வீட்டில் இருந்தபடி பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகள் அனைத்தையும் ஏற்கெனவே பிசிசிஐ தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x