Published : 15 Mar 2020 07:35 AM
Last Updated : 15 Mar 2020 07:35 AM

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட விளையாட்டுகள்

கோவிட் 19 வைரஸ் தொற்றுஉலகம் முழுவதும் விளையாட்டுத்துறையை கடுமையாக பாதித்துள்ளது. இத்தாலியில் உள்ள கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

தடகளம்: ஏப்ரல் 6 முதல் 8 வரை போபாலில் நடைபெற இருந்த பெடரேஷன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாட்மிண்டன்: மார்ச் 24 முதல் 29 வரை டெல்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் ஏப்ரல் 12-ம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கூடைப்பந்து: பெங்களூருவில் மார்ச் 18 முதல் 22 வரை நடைபெற இருந்த 3x3 கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதி சுற்று தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செஸ்: தேசிய அளவிலான அனைத்து செஸ் போட்டிகளும் மே 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்: மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 மற்றும் 18-ம் தேதிகளில் லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர உள்நாட்டில் நடைபெறும் ஈரானி கோப்பை உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் தள்ளிவைத்துள்ளது பிசிசிஐ. சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மும்பை, புனேவில் நடைபெற்று வந்த லெஜன்ட்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து : கோவாவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் பார்வையாளர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்தத் ஆட்டத்துக்கு பிறகு மே 31 வரை அனைத்து கால்பந்து தொடர்களையும் தள்ளி வைத்துள்ளது இந்திய கால்பந்து சங்கம்.

ஏப்ரல் 14 முதல் 27 வரை நடைபெற இருந்த சந்தோஷ் டிராபிகால்பந்து தொடரின் இறுதி சுற்று ஆட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ லீக் கால்பந்து தொடரின் எஞ்சிய 28 ஆட்டங்களும் பார்வையாளர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26-ல் புவனேஷ்வரில் நடைபெற இருந்த இந்தியா - கத்தார் அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜூன் 9-ல் கொல்கத்தாவில் நடைபெற இருந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தையும் தள்ளி வைத்துள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு.

கோஃல்ப்: மார்ச் 19 முதல் 22வரை டெல்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் கோஃல்ப்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 16 முதல் இந்தியதொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணத்தின் (பிஜிடிஐ) அனைத்து போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கார் பந்தயம்: சென்னையில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற உள்ள தென் இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயம், எப்ஐஏ சார்பில் நடத்தப்படும் ஆசிய பசிபிக் கார் பந்தய சாம்பியன்ஷிப் முதல் சுற்று ஆகியவை பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட உள்ளது.

பாரா விளையாட்டு: ஏப்ரல் 15 வரை அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான பாரா விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சுடுதல்: டெல்லியில் மார்ச் 15 முதல் 25 வரை நடைபெற இருந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ்: உள்நாட்டில் நடைபெற இருந்த அனைத்து டென்னிஸ் தொடர்களையும் ரத்து செய்துள்ளது அகில இந்திய டென்னிஸ் சங்கம்.

ஹாக்கி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வரும் புரோ ஹாக்கி தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய ஆடவர் அணியும் பங்கேற்றுள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 26-ம் தேதி ஜெர்மனியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x