Published : 15 Mar 2020 07:32 AM
Last Updated : 15 Mar 2020 07:32 AM

ஐஎஸ்எல் தொடரில் கொல்கத்தா சாம்பியன்: சென்னையை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி-யை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கோவா ஃபடோர்டாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்தில் சென்னையின் எப்சி வீரர் ரபேல் கிரிவெல்லாரோ கார்னரில் இருந்து கொடுத்த கிராஸை பெற்ற லூசியன் கோயன் இலக்கை நோக்கி உதைத்த போது இடதுபுறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 10-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணாவின் கிராஸை பெற்ற ஜேவியர் ஹெர்னாண்டஸ் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து இடதுபுறத்தை நோக்கி உதைத்த பந்து கோல் வலையை துளைத்தது.

இதனால் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 20-வது நிமிடத்தில் சென்னையின் எப்சி வீரர் லாலியன்ஜூவாலா சாங்க்டே இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்து கோல் விழாமல் தடுக்கப்பட்டது. இதேபோன்று 27-வது நிமிடத்தில் நெரிஜஸ் வால்ஸ்கிஸின் கோல் அடிக்கும் முயற்சிக்கும் பலன் இல்லாமல் போனது. தொடர்ந்து போராடிய போதிலும் முதல் பாதியில் சென்னை அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் டேவிட் வில்லியம்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற எட்வர்டோ கார்சியா கோல் அடிக்க கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை பெற்றது. 69-வது நிமிடத்தில் சென்னை அணி தனது முதல் கோலை அடித்தது. லாரின்ஜூவாலா உதவியுடன் இந்த கோலை நெரிஜஸ் வால்ஸ்கிஸ் அடித்தார். இதனால் 1-2 என சென்னை அணி நெருங்கி வந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜேவியர் ஹெர்னாண்டஸ் மீண்டும் கோல் அடிக்க கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டில் கோப்பையை வென்றிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x