Published : 14 Mar 2020 09:15 AM
Last Updated : 14 Mar 2020 09:15 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் 3-வது முறையாக பட்டம் வெல்லுமா சென்னையின் எப்சி?- இறுதிப் போட்டியில் இன்று கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை

கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் கோவா ஃபடோர்டாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு மோதுகின்றன.

கொல்கத்தா அணி 2014 மற்றும் 2016-ம் ஆண்டில் கோப்பையை வென்றிருந்தது. அதேவேளையில் சென்னையின் எப்சி 2015 மற்றும் 2018-ல் கோப்பையை கைப்பற்றியிருந்தது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற பெருமையை பெறும்.

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்றைய இறுதி ஆட்டம் பார்வையாளர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையின் எப்சி தனது அரை இறுதி ஆட்டத்தில் சராசரி கோல்கள் விகிதப்படி 6-5 என்ற கோல் கணக்கில் எப்சி கோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்திருந்தது. அதேவேளையில் கொல்கத்தா அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் சராசரி கோல்கள் விகிதப்படி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.

ஐஎஸ்எல் கால்பந்து வரலாற்றில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறை. இந்த சீசனில் லீக் சுற்றில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. ஆனால் இதற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி பதிலடி கொடுத்தது. அந்த ஆட்டத்தில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை தோற்கடித்தது.

கொல்கத்தா அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது. அதேவேளையில் சென்னை அணி கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய பயிற்சியாளர் ஓவன் கோய்லேவின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையிலான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்கச் செய்தது.

ஓவன் கோய்லே வருகைக்கு முன்னர் சென்னை அணி பங்கேற்ற 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. அதிலும் மொத்தம் 4 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓவன் கோய்லே பொறுப்பேற்ற பின்னர் 8 வெற்றிகளை குவித்து மிரட்டியது சென்னை அணி.

இந்த சீசனில் 14 கோல்கள் அடித்துள்ள நெரிஜஸ் வால்ஸ்கிஸ், லாவகமாக விளையாடும் திறன் கொண்ட ரஃபேல் கிரிவெல்லாரோ ஆகியோரது கூட்டணி அணிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதேவேளையில் இந்தியாவின் லாலியன்ஜூவாலா சாங்க்டே கடந்த 3 ஆட்டங்களிலும் கோல் அடித்து அணியின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளார்.

ஓவன் கோய்லே கூறும்போது, “கொல்கத்தா அணி மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. மிகவும் திறமையான வீரர்களை கொண்ட அணி அது. எப்போதும் போல் எங்கள் பாணியிலேயே விளையாடுவோம். ஏனெனில், அவ்வாறு விளையாடினால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம். இறுதிப் போட்டியில் நுழைந்தாலும் இன்னும் நாங்கள் அழுத்தத்துடன் தான் இருக்கிறோம். நாங்கள் இதை விரும்புகிறோம். அப்போதுதான் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த முடியும்” என்றார்.

கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா, டேவிட் வில்லியம்ஸ் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இதில் ராய் கிருஷ்ணா இந்த சீசனில் 15 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கார்சியா, ஜேவியர் ஹெர்னாண்டஸ், பிரபிர் தாஸ் ஆகியோரும் அணிக்கு வலுசேர்க்கக்கூடியவர்கள்.

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x