

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 3 கேலரிகள் திறக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் 2011-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே, கே என்ற பெயரில் 3 கேலரிகள் புதிதாகக் கட்டப்பட்டன. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த கேலரிகளும் விதிமுறைகளை மீறி கட்டியிருப்பதாகவும், முறையான அனுமதி பெறவில்லை எனவும் கூறி சென்னை மாநகராட்சி, அந்த 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
இதனால் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது கேலரிகளின் பிரச்சினையை தீர்க்க தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காமல் இருந்து வந்தது.
இதையடுத்து புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரிகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்க மாற்று திட்டத்தை தமிழக கிரிக்கெட் சங்கம் முன் வைத்தது. இது அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து மைதானத்துக்கான குத்தகை தொகையிலும் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குத்தகைக்கான ஒப்பந்தத்தை அரசு புதுப்பித்தது.
இதையடுத்து கடந்த எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளையும் திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் 3 கேலரிகளையும் திறக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று சீல் வைக்கப்பட்டிருந்த 3 கேலரிகளும், வளர்ச்சிக் குழும மண்டல அதிகாரி ரவிக்குமார் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன.
இதையடுத்து கேலரிகளைத் திறக்க அனுமதித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சங்கத்தின் கவுரவச் செயலர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.