Last Updated : 13 Mar, 2020 03:37 PM

 

Published : 13 Mar 2020 03:37 PM
Last Updated : 13 Mar 2020 03:37 PM

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஐபிஎல் டி20 போட்டிகளை ஒத்திவைத்தது பிசிசிஐ: எப்போது தொடங்கும்?

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் தீவிரமடைவதைத் தடுக்கும் பொருட்டு, ஐபிஎல் டி20 போட்டிகள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 15-ம் தேதிவரை ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 4 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனா வைரஸுக்கு 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் இறந்துள்ளார்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்தல் மூலம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளும் பல விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்து வருகின்றன.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், பணி நிமித்தமாகச் செல்பவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஏப்ரல் 15-ம் தேதி வரை விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்டி20 போட்டி போட்டியில் ஏப்ரல் 15-ம் தேதிவரை பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் விளையாட்டுப்போட்டிகள் அனைத்தையும் ரசிகர்கள் இன்றி நடத்திக்கொள்ளலாம் அல்லது ஒத்தி வைப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும் பிசிசிஐ, தேசிய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தியது.

இதனால் வரும் 29-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இன்று நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே பொதுமக்கள் கூடும் இடங்களைத் தவிர்த்தல் என்ற முறையில் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு கூறியிருந்தது.

அதற்கு ஏற்றால் போல் டெல்லியில் இம்மாதம் இறுதிவரை ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டது. இதனால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் பிசிசிஐ அமைப்புக்கு ஐபிஎல் போட்டி நடத்துவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில், " ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் 29-ம் தேதி தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதால் அவர்களுக்கு ஒத்துழைத்துச் செயல்பட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆதலால், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிவரை சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : கோப்புப்படம்

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விளையாடும் வீரர்கள், பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான உணர்வு, அனுபவம் தேவை என்பதால், ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதிவரை ஒத்திவைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே நாளை மும்பையில் ஐபிஎல் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்தான் ஐபிஎல் போட்டிகளை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்த வடிவத்தில் நடத்துவது, லீக் ஆட்டங்களைக் குறைப்பதா ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். அல்லது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x