டெல்லியில் ஐபிஎல் டி20 போட்டிகள் நடத்த தடை: கரோனா அச்சத்தால் டெல்லி அரசு அதிரடி முடிவு

டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா : படம் ஏஎன்ஐ
டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

கரோனா பரவல் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில் ஐபிஎல் டி20 போட்டிகள் உள்ளிட்ட எந்தவிதமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவதற்குத் தடை விதித்து டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை உயிரிழப்புகளைச் சந்தித்திராமல் இருந்து வந்த நம் நாட்டில் முதல்முறையாகக் கர்நாடக மாநிலம் கலாபுர்க்கியில் 76 வயது முதியவர் முதல் நபராக உயிரிழந்துள்ளார். இதுவரை 75 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இதுவரை 6 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதைத் தடுக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களிடம் நேற்று பேசுகையில், " தேர்வு நடைபெறும் வகுப்புகளைத் தவிர அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதிவரை விடுமுறை விடப்படும் என்றும், திரையரங்குகளும் வரும் 31-ம் தேதிவரை திறக்கக்கூடாது" என்று அறிவித்தார்.

மேலும் கரோனா வைரஸ் நோயை பெரும் தொற்றுநோய் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " கரோனா வைரஸ் அச்சம், பரவுவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில் ஐபிஎல் டி20 போட்டி உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்தால்தான் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க முடியும், அவர்களும் விரைவாக விடுபட முடியும். மாநில அரசு விதித்துள்ள அனைத்து உத்தரவுகளையும் முறைப்படி நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர் " எனத் தெரிவித்தார்

ஏற்கெனவே ஏப்ரல் 15-ம் தேதிவரை வெளிநாட்டினருக்குச் சுற்றுலா விசா வழங்குவதை ரத்து செய்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் 15-ம் தேதிக்கு மேல்தான் பங்கேற்பார்கள் என்ற சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படக்கூடாது, கூட்டம் கூடுதலைத் தவிர்க்கும் வகையில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சகம் பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in