ரஷீத் கானின் அபார பேட்டிங்கினால் சூப்பர் ஓவர்; கெவின் ஓ பிரையனின் கடைசி பந்து சிக்சர்: அயர்லாந்துக்கு த்ரில் வெற்றி

ரஷீத் கானின் அபார பேட்டிங்கினால் சூப்பர் ஓவர்; கெவின் ஓ பிரையனின் கடைசி பந்து சிக்சர்: அயர்லாந்துக்கு த்ரில் வெற்றி
Updated on
2 min read

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 3வதும் கடைசியுமான டி20 போட்டியில் ஆப்கான், அயர்லாந்து அணிகள் 142 என்ற ரன்களில் ஆட்டத்தைச் சமன் செய்ய சூப்பர் ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது, ஆனாலும் இது அயர்லாந்துக்கு ஆறுதல் வெற்றியே, ஏனெனில் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்று ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் வெற்றிக்குத் தேவையான நிலையில் ரஷீத் கானின் அபார சிக்சர் மற்றும் பவுண்டரிகளினால் 15 ரன்கள் எடுக்க ஸ்கோர் 142 என்று சமன் ஆனது.

தொடர்ந்து சூப்பர் ஓவருக்குச் சென்ற ஆட்டத்தில் அயர்லாந்து முதலில் பவுலிங் செய்தது. முகமது நபி, ரஹமத்துல்லா குர்பாஸ் ஆகியோர் இறங்க அயர்லாந்து அணியின் யங் பிரமாதமாக வீசி பவுண்டரியே கொடுக்காமல் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க அயர்லாந்து அணிக்கு 9 ரன்கள் வெற்றி இலக்கு.

ரஷீத் கான் அந்த சூப்பர் ஓவரை வீசினார், அயர்லாந்து அணியில் கெவினோ பிரையனும் ஸ்டர்லிங்கும் இறங்கினர். இதில் முதல் பந்தில் பிரையன் சிங்கிள் எடுக்க அடுத்த பந்தை ஸ்டர்லிங் லாங் ஆன் மிட்விக்கெட் இடையே பவுண்டரிக்குப் பறக்க விட்டார். ஆனால் அடுத்த பந்தே ரஷீத் கான் கூக்ளியில் ஸ்டர்லிங்கை எல்.பி.செய்து பழிதீர்த்தார். அடுத்த 2 பந்துகளில் 1 ரன் தான் வந்தது, கடைசி பந்தை கெவினோ பிரையன் பவுலர் தலைக்கு மேல் நேராக சிக்சருக்குத் தூக்க அயர்லாந்து வெற்றிபெற்றது. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையாக இருந்தது, இதில் 2 ரன்களை மட்டுமே பிரையன் எடுத்திருந்தால் இன்னொரு சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றிருக்கும், ஆனால் கெவினோ பிரையன் மிகப்பிரமாதமாக சிக்சர் விளாசி அயர்லாந்துக்கு 13 போட்டிகளில் ஆப்கானுக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி பால் ஸ்டர்லிங்கை (0) முதல் ஓவரில் இழந்தது, 2வது ஓவரில் கேப்டன் பால்பர்னியும் 9 ரன்களில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

பிறகு ஓபிரையன் (21 பந்துகளில் 26), டெலானி (29 பந்துகளில் 37), மறுகட்டுமானம் செய்தனர், ஆனால் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன் பிறகு ஹாடி டெக்டர் என்ற வீரர் 2 அபாரமான சிக்சர்களுடன் 22 பந்துகளில் 31 ரன்களை விளாச அயர்லாந்து ஸ்கோர் 142 ஆக உயர்ந்தது. ஆப்கான் தரப்பில் நவீன் உல் ஹக், குவைஸ் அகமெட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் பிரமாதமாகத் தொடங்கியது. ரஹ்மத்துல்லா குர்பாஸ் 29 பந்துகளில் 42 ரன்களையும் உஸ்மான் கனி 24 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க 60 ரன்கள் என்ற திடமான தொடக்கத்தைப் பெற்றது ஆப்கான் அணி. ஆனால் டெலானி இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்த, கரிம் ஜனத் 11 பந்துகளில் 17 ரன்கள் என்ற நிலையில் மெக்கார்த்தியிடம் பவுல்டு ஆனார்.

மேலும் சிமி சிங் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆப்கான் நிலைதடுமாறியது. அதன் பிறகுதான் ரஷீத் கான் (6 பந்துகளில் 14) கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஸ்கோரை டை செய்ய, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது, ஆனால் 9 ரன்களை ரஷீத் கானால் தடுக்க முடியவில்லை, சிறப்பாக வீசினாலும் கடைசி பந்தை கெவினோ பிரையன் தூக்கி சிக்சருக்கு விரட்ட அயர்லாந்துக்கு சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி.

ஆட்ட நாயகன் கெவினோ பிரையன், தொடர் நாயகன் ஆப்கானின் ரஹ்மனுல்லா குர்பாஸ். அயர்லாந்து அடுத்ததாக தங்கள் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் மே மாதம் விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in