

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ரிட் மனு செய்துள்ளது.
நீதிபதி லோதா கமிட்டியின் உத்தரவு, "இயற்கை நீதி மற்றும் நியாயமான விசாரணை என்பதன் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது” என்று இந்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் உயர்மட்ட விசாரணைக்குழுவான லோதா கமிட்டி, நீதிபதி முத்கல் கமிட்டியின் விசாரணை முடிவுகளை ஆராய வேண்டும் அவ்வளவே என்பதை லோதா கமிட்டி உணரவில்லை என்றும் மனுவில் கூறியிருக்கிறது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மற்றும் வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டுகள் இல்லை. குருநாத் மெய்யப்பனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. மேலும் அவர் நிர்வாகத்திலும் இல்லை என்று கூறியுள்ளது இந்த மனு.
மேலும், அணியின் நட்சத்திர வீரர்களை பிற அணிகள் ஒப்பந்தம் செய்து விட்டால், மீண்டும் இருக்கும் வீரர்களுடன் புதிய வீரர்களைத் தேடவேண்டி வரும், புதிய அணி போட்டித்திறனுடன் அமையுமா என்பதும் சந்தேகமாக உள்ளது எனவே லோதா கமிட்டி தடைக்கு தடை கோரி சென்னை சூப்பர் கிங்ஸ் மனு செய்துள்ளது.