Published : 11 Mar 2020 07:27 PM
Last Updated : 11 Mar 2020 07:27 PM

417 விக்கெட்டுகள் எடுத்ததுடன் சரி.. அது கூட பெரிய  ‘ஜீரோ’ ஆகத் தெரிகிறது போலும்: ஏன் என்னைப் புறக்கணித்தார்கள்? வேதனையுடன் ஹர்பஜன் மனம் திறப்பு 

இந்திய அணிக்காக 1998 முதல் 2015 வரை ஆடி 417 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 269 ஒருநாள் விக்கெட்டுகளையும், 28 டி20யில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பேட்டிங்கிலும் முக்கியமான பல டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிய ஹர்பஜன் சிங் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் 2015-ம் ஆண்டு கழற்றி விடப்பட்டார்.

அதாவது 2012-ல் ஒரு டெஸ்ட், 2013 மற்றும் 2015-ல் தலா 2 டெஸ்ட் போட்டிகள் என்று அந்தக் காலக்கட்டத்தில் 34 டெஸ்ட்களில் இந்திய அணி ஆட 5 டெஸ்ட் போட்டிகளையே ஹர்பஜன் சிங் ஆடினார். இதனால் 417 விக்கெட்டுகளுடன் தேங்கிப் போனார். 25 முறை 5 விக்கெட்டுகளையும் 5 முறை டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அணித்தேர்வுக்குழுவும் சரி கேப்டன் தோனியும் கூட தன்னை காக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:

நன்றாக ஆடி வந்த போதும் திடீரென என்னை அணியிலிருந்து கழற்றி விட்டது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. 2012-ல் ஒரு டெஸ்ட், 2013-15-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடினேன். 400 விக்கெட்டுகள் எடுத்தும் நான் உட்கார வைக்கப்பட்டேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

தேர்வுக்குழுவினர் என்னிடம் எந்த ஒரு காரணத்தையும் இன்று வரைக் கூறவில்லை. அணி நிர்வாகமும் காரணம் கூறவில்லை. நான் தகுதியின் அடிப்படையில்தான் ஆடினேன். என்னைப் புறக்கணித்த போது என்னை விட 100 விக்கெட்டுகள் குறைவாக எடுத்திருந்த பவுலர்கள் இப்போது என்னைக் கடந்து சென்று விட்டனர். 417 டெஸ்ட் விக்கெட்டுகளில் தேங்கி விட்டேன், பலரும் என்னைக் கடந்து சென்று விட்டனர்.

நான் ஒன்றும் அவ்வளவு மோசமான பவுலர் அல்ல. இந்த 4 ஆண்டுகளில் நிச்சயம் நான் பங்களிப்பு செய்திருக்க முடியும். 400 விக்கெட்டுகள் என் பெயரில் இருக்கிறது, ஆனால் அது திடீரென ஒன்றுமேயில்லாமல் பெரிய ஜீரோவாகி விட்டது போலும்.

இன்னும் 100 விக்கெட்டுகளைச் சேர்த்திருப்பேன். என்னை இது நினைக்க நினைக்கக் காயப்படுத்துகிறது. காலத்தில் பின்னால் சென்று வலிநிறைந்த அந்த வலிகளை நினைவிலிருந்து அகற்ற விரும்புகிறேன். சிஸ்டமில் சிறந்த வீரர்களை விரும்புகிறேன். தங்களை முன்னிறுத்தாமல் இந்திய கிரிக்கெட்டை முன்னிறுத்தியவர்களை விரும்புகிறேன்.. அவர்கள் பெயர்களை கூற நான் விரும்பவில்லை.

ஒரு கேப்டன் நினைத்தால் ஒரு வீரரின் கரியரை உயரே கொண்டு செல்ல முடியும் இல்லை எனில் கீழே போட்டு மிதிக்கவும் முடியும். எனக்கு கூட்டாளியாக அனில் கும்ப்ளே கிடைத்ததும் தாதா கங்குலி கேப்டனாகக் கிடைத்ததையும் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். தாதா பவுலர்களின் கேப்டன். தாதாவிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். பவுலர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் குறிப்பாக ஸ்பின்னர்களிடமிருந்து வெளிக்கொணர்வதில் தாதா பிரமாதமான ஒரு கேப்டன்.

இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x