கரோனா வைரஸ் எதிரொலி; ஐபிஎல் 2020 நடக்குமா? ரசிகர்களே இல்லாமல் ’காலி’ மைதானத்தில் நடக்குமா?: சனிக்கிழமை கூடும் ஐபிஎல் ஆட்சிக்குழு

கரோனா வைரஸ் எதிரொலி; ஐபிஎல் 2020 நடக்குமா? ரசிகர்களே இல்லாமல் ’காலி’ மைதானத்தில் நடக்குமா?: சனிக்கிழமை கூடும் ஐபிஎல் ஆட்சிக்குழு
Updated on
1 min read

13வது ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் கரோனா அச்சுறுத்தலினால் போட்டித்தொடர் நடப்பது குறித்த ஆலோசனைகளுக்காக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு வரும் சனிக்கிழமை கூடி விவாதிக்கவுள்ளது.

மகாராஷ்ட்ரா அரசு ஐபிஎல் போட்டிகள் மும்பை, புனேவில் நடக்கும் போது மூடப்பட்ட ஸ்டேடியத்தில் நடக்கும் என்று தங்கள் முன் மொழிவை எடுத்ததையடுத்தும், கர்நாடக அரசு ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனைக் கேட்டு கடிதம் எழுதியதையடுத்தும் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது.

மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. வீரர்கள், பார்வையாளர்கள் பாதுகாப்புடன் வர்த்தக நலன்களும் பாதுகாப்பது தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது, கரோனா அச்சுறுத்தலை விட வணிக நலன்கள் மேலோங்குமா என்பது சனிக்கிழமை கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும்.

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மகாராஷ்ட்ரா, கர்நாடகாவைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் ஐபிஎல்-க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஆட்சிமன்றக் குழு இது குறித்து எதுவும் பேசாமல் மவுனியாக இருந்து வருகிறது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் காலியான நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது, ஐபிஎல் போட்டி வருவாய் கணக்கில் கேட் கலெக்‌ஷன் பெரிய பங்களிப்புச் செய்வதில்லை என்கின்றனர். ஆனால் அணி உரிமையாளர்களுக்கு கேட் கலெக்‌ஷன் வருவாய்தான் முக்கியமானதாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் பெயர் கூற விரும்பாமல் தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்குக் கூறும்போது, காலியான மைதானத்தில் போட்டிகள் நடப்பதை விட நடக்காமல் இருப்பதே மேல் என்று விரக்தியாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் நடக்குமா நடக்காதா என்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in