Last Updated : 10 Mar, 2020 08:25 PM

 

Published : 10 Mar 2020 08:25 PM
Last Updated : 10 Mar 2020 08:25 PM

தோனி போன்ற ஒரு ஃபினிஷரைத்தான் தேடுகிறோம்: ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் ஆதங்கம்

எம்.எஸ். தோனி : கோப்புப்படம்

மெல்போர்ன்

ஒருநாள் போட்டிகளில் தோனி அல்லது மைக்கேல் பெவன் போன்ற முழுமையான ஃபினிஷரைத்தான் தேடுகிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நடுவரிசையில் எதிர்பார்த்த அளவுக்கு வலிமையான பேட்ஸ்மேன்கள் இல்லாதது பெரிய குறையாக இருந்து வருகிறது. தொடக்க வீரர்கள் நிலைத்து விளையாடினால் நடுவரிசை வீரர்கள் சொதப்புவது தொடர்ந்து வருகிறது.

ஜஸ்டின் லாங்கர்

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஐசிசி இணையதளத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''ஒருநாள் போட்டியில் எங்கள் அணியின் துரதிர்ஷ்டம் மைக் ஹசி, மைக்கேல் பெவன் போன்ற அருமையான ஃபினிஷர்கள் இல்லை. இவர்கள் இல்லாத காரணத்தால், நடுவரிசைக்கு நாங்கள் பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இப்போது எங்களுக்கு தோனியைப் போன்று சிறந்த ஃபினிஷர் தேவைப்படுகிறார். இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் இருக்கிறார். இதுபோன்ற சிறந்த ஃபினிஷர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக தோனி, பல நேரங்களில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, நம்பிக்கையற்ற சூழலில் இருந்தபோது அவரின் சூப்பர் ஃபினிஷிங் மூலம் அணியை வெல்ல வைத்துள்ளார். ஆதலால் தோனி போன்ற சிறந்த ஃபினிஷரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

நியூஸிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் அதுபோன்ற ஃபினிஷரைத் தேடித்தான் நாங்கள் பல்வேறு சோதனைகள் செய்ய இருக்கிறோம். இப்போது இருக்கும் நிலையில் அணியில் யாருக்கும் நிரந்தரமான இடம் இல்லை. ஆனால், வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் அந்த இடத்தை நிரப்புவார்கள்''.

இவ்வாறு ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x