Published : 10 Mar 2020 01:12 PM
Last Updated : 10 Mar 2020 01:12 PM

சவுமியா சர்க்கார், லிட்டன் தாஸ் அதிரடி, முஸ்தபிசுர் அபாரம்: அதிகபட்ச டி20 ஸ்கோரை எடுத்த வ.தேசத்திடம் ஜிம்பாப்வே அணி படுதோல்வி

வங்கதேசத்துக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட ஷான் வில்லியம்ஸ் தலைமையிலான ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக 0-3 என்று இழந்தது, ஆனால் டி20 தொடரிலாவது சாதிக்கலாம் என்று களமிறங்கிய நிலையில் வங்கதேச அணி அதிரடி ஆட்டத்தில் முதல் டி20யிலும் ஜிம்பாப்வேயை வென்றது.

டாக்காவில் நேற்று இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த மஹ்முதுல்லா தலைமை வங்கதேச அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவர்களில் 152 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைய, 2 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

வங்கதேச அணி டி20 கிரிக்கெட்டில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராக 200/3 அமைந்தது.

வங்கதேச அணியில் சவுமியா சர்க்கார் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 62 ரன்களை எடுக்க, அன்று ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை புரிந்த லிட்டன் தாஸ் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 39 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.

லிட்டன் தாஸ், தமிம் இக்பால் (41) ஜோடி முதல் விக்கெட்டுக்காக 92 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் பதின்ம வயது ஜிம்பாப்வே அறிமுக வீரர் வெஸ்லி மதேவ்ரே, தமிம் இக்பாலை வீழ்த்தி கூட்டணியை உடைத்தார். பிரமாதமாக ஆடிய லிட்டன் தாஸை, சிகந்தர் ரஸா (1/31) எல்பி. செய்தார்.

சவுமியா சர்க்கார், இவர் பார்மில் வருவதற்காகப் பார்த்துக் கொண்டிருந்தார், இந்தப் போட்டி அதற்கான சந்தர்பமாக அமைந்தது, 4 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த சவுமியா சர்க்கார் வங்கதேசத்தின் முந்தைய டி20 அதிகபட்ச ஸ்கோரான 175 ரன்களைக் கடக்க உதவினார்.

கிறிஸ் மபோஃபூ வீசிய கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளை சிக்சருக்குப் பறக்க விட்டார் சவுமியா சர்க்கார்.

ஜிம்பாப்வே அணி இலக்கை விரட்டும் நிலையில் எந்தத் தருணத்திலும் இல்லை காரணம் டெய்லர், எர்வின், மதேவ்ரே ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஜிம்பாப்வே அணியில் ஒருவரும் 30 ரன்களை எட்டவில்லை, தொடக்க வீரர் தினாஷே மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்தார். இவரும் அமினுல் இஸ்லாம் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் ஷான் வில்லியம்ஸ் (20) விக்கெட்டையும் அமினுல் வீழ்த்தி ஜிம்பாப்வேயை முடக்கினார். ரிச்மோண்ட் முதும்பமி, டொனால்ட் டிரிபானி ஆகிய இருவரும் தலா 20 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் இறங்கிய கார்ல் மும்பா 16 பந்துகளில் 25 என்று ஆக்ரோஷம் காட்டினார். ஆனால் ஜிம்பாப்வே 152 ரன்களுக்குச் சுருண்டது.

அமினுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக சவுமியா சர்க்கார் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x